மோடிக்கு அடுத்து யார்? – இப்படி ஒரு கேள்வியுடன் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியிருக்கிறது இந்தியா டுடே செய்தி நிறுவனம். பாஜகவில் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்க தகுதியுள்ள நபர் யார் என்பதுதான் இந்த கருத்துக் கணிப்பின் கேள்வி.
பாஜகவைப் பொறுத்தவரை 75 வயதை அடைந்தவர்கள் தங்கள் பொறுப்புகளை விட்டு தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. எடியூரப்பா முதற்கொண்டு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் 75 வயதுக்குப் பிறகு தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடியின் வயதும் 75-ஐ எட்டுவதால் அவருக்குப் பிறகு இந்திய பிரதமராக தகுதியுள்ள பாஜக தலைவர் யார் என்ற கேள்வி பெரிய அளவில் மக்களிடையே உள்ளது. அதற்கு பதில் காணும் விதமாக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க 40,591 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் பாஜகவில் மோடிக்கு பிறகு நாட்டின் பிரதமராக தகுதியுள்ள தலைவராக அமித் ஷாவின் பெயரை 25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதில் வட இந்தியாவைவிட தென் இந்தியாவில் அமித் ஷாவின் செல்வாக்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 31 சதவீதம் பேர், மோடிக்குப் பிறகு நாட்டின் தலைமைப் பதவியை ஏற்க தகுதியுள்ள நபராக அமித் ஷாவை பார்க்கின்றனர்.
அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக நாட்டின் அடுத்த பிரதமராக தகுதியுள்ள நபராக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்க்கப்படுகிறார். 19 சதவீதம் பேர் மோடிக்கு பிறகு அடுத்த பிரதமராக யோகி ஆதித்யநாத் தகுதியுள்ளவர் என்று கருதுகிறார்கள். யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து நிதின் கட்கரிக்கு 13 சதவீதம் பேரும், ராஜ்நாத் சிங்குக்கு 5 சதவீதம் பேரும், சிவராஜ் சிங் சவுகானுக்கு 3 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.
ஹரியானாவில் முந்தும் காங்கிரஸ்