No menu items!

’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ – புத்தகத்தில் என்ன இருக்கு? – ரவிக்குமார் எம்.பி

’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ – புத்தகத்தில் என்ன இருக்கு? – ரவிக்குமார் எம்.பி

தமிழக அரசியல் களத்தில் இப்போது ஹாட் டாபிக் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாதான். அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டவை எல்லாப் பக்கமும் பேசுபொருளாகியிருக்கிறது. சரி, இந்த நூலில் என்ன இருக்கிறது?

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் பற்றி, விசிக பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார் தரும் அறிமுகம் இங்கே…

“விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலின் ஐந்து பிரதிதிகளுக்கு முன்பணம் செலுத்தி இருந்தேன். இன்று காலை தான் அந்தப் பிரதிகள் கூரியரில் வந்து சேர்ந்தன. நான் எழுதிய ஒரு கட்டுரை, திரு அஷோக் வரதன் ஷெட்டி எழுதிய இந்த நூலின் தலைப்புக் கட்டுரை, விசாவுக்கு காத்திருத்தல் என்ற அம்பேத்கரின் தன் வரலாற்றுக் குறிப்புகள் முதலானவற்றை ஏற்கனவே படித்திருந்ததால் அவற்றை விட்டுவிட்டு மற்ற கட்டுரைகளை வாசித்தேன்.

அம்பேத்கர் அறிதலும் உரையாடலும்; அண்ணலால் நாங்கள்; இது அம்பேத்கரின் தேசம் ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டிருக்கும் நேர்காணல்கள் கட்டுரைகள் என 25 படைப்புகளை வாசித்தேன். அம்பேத்கர் வாழ்வும் போராட்டமும் என்ற தலைப்பில் 160 பக்கங்கள் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மேலோட்டமாகப் படித்துப் புரட்டிவிட்டு, இது அம்பேத்கரின் உலகம் என்ற பிரிவின் கீழ் உள்ள அம்பேத்கரின் உணவு, வயலின் வகுப்பு ஆகிய சிறு கட்டுரைகளை வாசித்தேன்.

ஏன் கொண்டாட வேண்டும் அம்பேத்கரை ? என்ற பிரிவில் 45 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் தான் ‘அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்பும் தமிழ்நாட்டின் எதிர்வினைகளும்’ என்ற எனது கட்டுரையும், அஷோக் வரதன் ஷெட்டி கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. அதில் ஆதவ் அர்ஜுனா, இந்திரன், கௌதம சன்னா, இரா.அழகரசன், வினோத் மலைச்சாமி ஆகியோரின் கட்டுரைகளைப் படித்தேன்.

தலைவர் எழுச்சித் தமிழரின் நேர்காணல் இந்திய அளவில் இருக்கும் அரசியல் கட்சிகளிலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏன் தனித்துவமான கட்சியாக இருக்கிறது, அவர் எப்படி எல்லோராலும் மதிக்கப்படும் தலைவராக உள்ளார் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. இந்திய அளவில் அம்பேத்கரை இவ்வளவு தெளிவாகவும் செறிவாகவும் பேசக்கூடிய ஓர் அரசியல் கட்சித் தலைவரைக் காண்பது அரிது. அந்த நேர்காணலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்குப் பயன்படும்.

அஷோக் வரதன் ஷெட்டி அவர்களின் கட்டுரை அம்பேத்கரின் ஆக்கங்களில் அவருக்கு இருக்கும் புலமையை மட்டுமின்றி அனுபவங்களோடு அதை அவர் இணைக்கும் திறனையும் காட்டியது.

ஆனந்த் டெல்டும்டே, தேவனூரு மகாதேவா ஆகியோரின் சிந்தனைகளில் புதிய கோணங்கள் உள்ளன. அதனால் அவை பலரால் வரவேற்கப்படலாம், அதுபோலவே விமர்சிக்கப்படவும் வாய்ப்புண்டு.

விஜய் சூர்வா டே, ஜே.வி. பவார் ஆகியோரின் நேர்காணல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தமிழ் வாசகர்களுக்கு முற்றிலும் புதியவையாக இருக்கும்.

ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்கள் அரசமைப்புச் சட்டம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்தும்;( அரசமைப்புச் சட்டத்தை எரிப்பது தொடர்பானது)

பா. இரஞ்சித் சமத்துவபுரத் திட்டம் பற்றி சொல்லி இருக்கும் கருத்தும் ( இப்போது சமத்துவபுரங்கள் முழுக்க முழுக்க தலித்துகள் வாழும் இடமாக மட்டுமே இருக்கிறது.) எனக்கு மன நெருடலைத் தந்தன.

அரசமைப்புச் சட்டத்தை எரிப்பேன் என அம்பேத்கர் ஏன் கூறினார் என்பது குறித்து அரசமைப்புச் சட்ட நாளில் நான் மின்னம்பலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். Iconoclast நூலில் ஆனந்த் டெல்டும்டே அதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சமத்துவபுரங்களை நான் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறேன். அங்கு எல்லா சாதியினரும் வசிக்கின்றனர் என்பதே உண்மை. இந்தத் தகவல் உட்பட பா.இரஞ்சித்தின் பேட்டியில் நிறைய விவரப் பிழைகள் உள்ளன. தொகுப்பாசிரியர்கள் அதைப் பார்த்து அவரோடு பேசித் திருத்தம் செய்திருக்க வேண்டும்.

சில மாதங்களாக ஆங்கிலத்தில் அம்பேத்கரைப் பற்றிய நூல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சவிதா அம்பேத்கர், அசோக் கோபால், ஆனந்த் டெல்டும்டே, ஆகாஷ் சிங் ரத்தோர், அனுராக் பாஸ்கர், முதலானவர்கள் எழுதிய அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறுகள், அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்கு குறித்த நூல்கள் என ஆங்கிலத்தில் படித்துக் கொண்டே இருப்பதால் இந்த நூலில் இதுவரை நான் வாசித்த கட்டுரைகளில் கொண்டாடக்கூடியதாக எதையும் சுட்ட முடியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் அதிகம் வாசிக்க வாய்ப்பற்றவர்களுக்கு இந்தத் தொகுப்பு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த நூலை ஒருவர் முழுமையாகப் படிப்பது சிரமம். ஏனென்றால் இது பல்வேறு தரத்திலான கட்டுரைகளைக் கொண்டதாக இருக்கிறது. எனவே இதை நான்கு ஐந்து நூல்களாகப் பிரித்து வெளியிடுவது நல்லது. அம்பேத்கர் வாழ்க்கை குறித்த பகுதி ஒரு தனி நூலாக வெளியிடப்பட்டால் பள்ளி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அம்பேத்கர் 100 ஐயும் அதிலேயே சேர்த்துக்கொள்ளலாம்.

புகைப்படங்கள் நன்றாக வரவேண்டும் என்பதற்காகவோ என்னவோ புத்தகம் முழுவதும் ஆயில் பேப்பரில் அச்சிடப்பட்டிருக்கிறது அதனால் எடை கூடி புத்தகத்தைக் கையாள்வது மிகவும் சிரமமாக உள்ளது. அடுத்த பதிப்பில் புக் பிரிண்ட் பேப்பரை உபயோகிப்பது நல்லது.

இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் தி.முருகன், வெ.நீலகண்டன், ஷாஜன் கவிதா ஆகியோர் இந்த நூலை உருவாக்க நிறைய நேரத்தையும் உழைப்பையும் தந்திருக்கிறார்கள். அவர்களது உழைப்புக்குக் கிடைத்த ஊதியத்தைவிடவும் இந்தப் பணியின்போது அம்பேத்கரை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு அவர்களுக்கு மதிப்புமிக்கதாக இருந்திருக்கும். அவர்களுக்கு என் பாராட்டுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...