No menu items!

மீண்டும் yo yo test – கிலியில் கிரிக்கெட் வீரர்கள்

மீண்டும் yo yo test – கிலியில் கிரிக்கெட் வீரர்கள்

இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைக்கு டாப் கியரில் தயாராகி வருகிறது இந்திய அணி. இதுபற்றி விவாதிப்பதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஆட தகுதியான 20 வீரர்களின் பட்டியல் இந்த ஆலோசனை கூட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு அந்த பட்டியலை பிசிசிஐ வெளியிடாவிட்டாலும், இதிலுள்ள வீரர்கள் சுழற்சி முறைப்படி இந்த ஆண்டில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலைத் தொடர்ந்து, இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு 2 நிபந்தனைகளை கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.

அந்த 2 நிபந்தனைகளில் ஒன்று ‘யோ யோ’ டெஸ்ட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இனி இடம் கிடைக்கும் என்பது. அடுத்த நிபந்தனை, அணிக்கு தேர்வாகும் வீரர்கள் டெக்ஸா (Dexa – bone scan test) எனப்படும் எலும்பு ஸ்கேன் சோதனையில் தாங்கள் உறுதியாக இருப்பதாக நிரூபிக்க வேண்டும் என்பது.

இந்த 2 நிபந்தனைகளை கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள நிலையில், ‘அது என்ன யோ யோ’ டெஸ்ட் என்ற கேள்வி விளையாட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரான ஜென்ஸ் பாங்க்ஸ்போ என்பவர்தான் இந்த ‘யோயோ டெஸ்ட்’ சோதனை முறையை உருவாக்கினார். இதன்படி 20 மீட்டர்கள் இடைவெளியில் 2 கூம்புகள் வைக்கப்பட்டிருக்கும். பயிற்சியாளர் விசில் அடித்ததும், வீரர்கள் 2 கூம்புகளுக்கும் இடையே மாறி மாறி ஓடவேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வீரர்கள் இந்த தூரத்தை ஓடிக் கடக்காவிட்டால் அவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் 8 நிமிடம் 15 விநாடிகளுக்குள் இந்த 2 கூம்புகளுக்கும் இடையே 2 கிலோமீட்டர்கள் தூரம் ஓடவேண்டும். மற்ற வீரர்கள் இதே தூரத்தை 8.30 நிமிடங்களில் கடக்க வேண்டும்.

இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்த சமயத்தில் இந்த ‘யோ யோ டெஸ்ட்’ அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கிய வீரர்கள் பலர் இதில் தேர்ச்சி பெற முடியாமல் தடுமாற, விராட் கோலி, தோனி, ரவீந்திர ஜடேஜா போன்ற உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்த வீரர்கள் இந்த தேர்வில் எளிதாக வெற்றி பெற்றனர். இந்த தேர்வில் வெற்றிபெற வீரர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என்பதால், அவர்கள் துறுதுறுப்பாக இருக்க இந்த உடற்பயிற்சி உதவியது. பீல்டிங்கில் இந்திய வீரர்கள் துடிப்பாக இருக்கவும் இது காரணமாக அமைந்தது.

ஆனால் என்ன காரணத்தாலோ, கடந்த சில காலமாக யோ யோ டெஸ்ட் முறை இந்திய அணியால் கடைபிடிக்கப்படாமல் இருந்தது. இதனால் வீரர்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவதை குறைத்ததுடன், பீல்டிங்கிலும் மந்தமாக செயல்படத் தொடங்கினர். இந்த நிலையில்தான் இப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ‘யோ யோ டெஸ்ட்’ மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாத வீரர்கள், அணியில் இனி தங்களுக்கு இடம் கிடைக்காதோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள்.

இதேபோல் வீரர்கள் அடிக்கடி காய்மடைவதை தடுக்க, அவர்களின் எலும்புகள் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் டெக்ஸா (Dexa – bone scan test) எனப்படும் எலும்பு ஸ்கேன் சோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா, பும்ரா, தீபக் சாஹர், பும்ரா போன்ற வீரர்கள் அடிக்கடி காயம் அடைவதைத் தொடர்ந்து வீரர்களுக்கு இந்த சோதனை அவசியமாக்கப்பட்டுள்ளது.

இந்த 2 நிபந்தனைகளுடன் ஐபிஎல் தவிர மற்ற உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இனி இடம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்தால் உலகக் கோப்பையை வெல்ல அது தீவிரமாய் இருப்பதுபோல் தெரிகிறது. அவர்கள் நினைப்பது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...