”அடுத்த மூன்று மாதங்களில் சீனாவில் 60 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும். உலக மக்களில் பத்து சதவீதத்தினர் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள். ஏராளமான மக்கள் இறப்பார்கள். இது ஒரு துவக்கம்தான்”
பீதியைக் கிளப்பும் ஒரு ட்விட்டர் பதிவை பதிந்திருக்கிறார் எரிக் ஃபெய்ஜி டிங். தொற்று நோய் மருத்துவர். புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா என்ற வார்த்தையை மறந்திருந்த சூழலில் மீண்டும் சீனா கொரோனா கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.
சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன. சீனாவிலிருந்து செய்திகள் கிடைப்பது அத்தனை சுலபமல்ல. அரசுத் தடைகள் பலவற்றைக் கடந்துதான் செய்திகள் உலகத்துக்கு வந்து சேரும். அப்படி தணிக்கை செய்யப்பட்ட செய்திகளே இத்தனை தீவிரத்தைக் காட்டுகின்றன.
ஆனால் வெளிவரும் செய்திகளை சீனா மறுத்திருக்கிறது. தினமும் நிறைய மரணங்கள் சீனாவில் நிகழ்கிறது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி கொரோனா தாக்கத்தினால் ஒரு மரணம் கூட சீனாவில் நிகழவில்லை என்று கூறியிருக்கிறது. கொரோனாவின் தாக்குதலினால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உடனே நிகழும் மரணங்களைதான் கொரோனா மரணங்களாக சீன அரசு பதிவு செய்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட மற்ற பாதிப்புகளினால் ஏற்படும் மரணங்கள் கொரோனா மரண பட்டியலில் வராது.
இப்போது சீனாவில் 3 லட்சத்து 86 ஆயிரம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கபப்ட்டிருக்கிறார்கள். இப்போது சராசரியாக 3000 பேர் புதிதாய் பாதிக்கப்படுகிறார். இந்த எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.
மரணங்களே நிகழவில்லை என்று சீன அரசு மறுத்தாலும் அங்கு மயான பூமிகள் நிரம்பி வழிவதாக வயிற்றைக் கலக்கும் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. உடல்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லை என்று மயான ஊழியர்கள் தெரிவிக்கிறார்களாம். உலகெங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் சமூக ஊடகங்கள் பலவற்றுக்கு சீனாவில் தடை இருக்கிறது. வெய்போ என்ற சீன சமூக ஊடகம் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் மக்கள் பதியும் கொரோனா குறித்த செய்திகளை அரசு நீக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், சீனாவில் இன்னும் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்படவில்லை. சில வாரங்களுக்கு முன் கொரோனா பொதுமுடக்கங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். அதன் விளைவாக பொது முடக்கம் அறிவிக்க சீன அரசு தயங்குவதாக கூறப்படுகிறது.
லேசான கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள் அலுவலகம் வரலாம் பணிகளை செய்யலாம் என்று சீன மாகாணங்கள் அறிவித்திருக்கின்றன. அதிக பாதிப்புடையவர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்கும். அந்த சமயத்தில் கொரோனா இன்னும் வேகமாக பரவி விடும் அதனால் பொது முடக்கம் அறிவிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் அங்கே கூறப்படுகின்றன.
சீனாவில் 90 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். அதனால் கொரோனா தாக்கினாலும் அதிக பாதிப்பு ஏற்படாது என்று சீன அரசு தரப்பில் கூறப்படுகிறது.
சரி, சீனாவில் பரவும் கொரோனாவினால் உலகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் என்ன பாதிப்பு?
சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தாக்கத்தை பொறுத்து சீனாவுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம். பயணங்களை தடை செய்யலாம். ஆனால் உலக அளவில் தடுப்பூசிகள் அதிகமாய் போடப்பட்டிருப்பதால் அதிக பாதிப்பு இருக்காது என்றே நம்பப்படுகிறது.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. கோவிட் வைரஸ் டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று உருமாறிக் கொண்டிருக்கிறது. இப்போது சீனாவில் பரவும் வைரஸ் எந்த மாதிரி உருமாறியிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். சில உருமாற்றங்கள் ஆபத்தில்லாதவையாகவும் சில உருமாற்றங்கள் அதிக சேதாரத்தை கொடுப்பதாகவும் இருக்கும். சீன அரசிடமிருந்து போதிய தரவுகள் கிடைக்காமலிருப்பதும் ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்கலாக இருக்கிறது.
இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன. இன்று மத்திய அரசு ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளது. மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியிருக்கிறது.