இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நாளை தொடங்குகிறது. பெர்த் நகரில் ஏற்கெனவே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் தொடரில் இப்போது 1-0 என முன்னணியில் இருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதால், 2-வது டெஸ்ட்டில் வென்றே ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்குகிறது. பகலிரவு போட்டியாக பிங்க் நிற பந்தில் இப்போட்டி நடத்தப்பட உள்ளதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இப்போட்டி சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
போட்டிக்கு முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களம் இறங்குவார் என்றும், தான் 3-வது பேட்ஸ்மேனாக ஆடப்போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின், ஜடேஜாவுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் ஆடுவார் என்று கூறினார்.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நாம் கவனிக்க வேண்டிய 5 முக்கிய வீர்ர்களைப் பார்ப்போம்.
ஜஸ்பிரித் பும்ரா:
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த 2 இன்னிங்ஸ்களிலும், முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை யாராலும் வெல்ல முடியாத பந்துவீச்சாளராக இருந்தார் ஜஸ்பிரித் பும்ரா. அதற்காக ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இந்த சூழலில் 2-வது போட்டி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழலில் நடக்கப் போகிறது. அதனால் பும்ரா இன்னும் சக்திவாய்ந்த பந்துவீச்சாளராக இந்த டெஸ்ட் போட்டியில் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
விராட் கோலி:
கடந்த சில மாதங்களாக சதங்கள் ஏதும் இல்லாமல் காய்ந்து கிடந்த விராட் கோலி, கடந்த டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஃபார்மில் இருக்கும் கோலியை சமாளிப்பது எப்போதுமே எதிரணிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். இம்முறை அந்த பிரச்சினையை ஆஸ்திரேலிய அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை வைத்துதான் அதன் வெற்றி இருக்கிறது.
ஜெய்ஸ்வால்:
சமீப காலத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் ஜெய்ஸ்வால். கடந்த டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் குவித்த ஜெய்ஸ்வால், இப்போது ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார். 22 வயதே ஆன ஜெய்ஸ்வால் பெர்த் டெஸ்ட் போட்டியில் 15 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் பறக்க விட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்ட்டிலேயே இப்படி பராக்கிரமம் காட்டிய ஜெய்ஸ்வாலிடம் இருந்து இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா நிறைய எதிர்பார்க்கிறது.
ஸ்டீவ் ஸ்மித்:
முதல் டெஸ்ட் போட்டியில் பெரிதாக எதையும் ஸ்டீவ் ஸ்மித் சாதிக்கவில்லை. அதற்காக அவர் அவ்வளவுதான் என்று நாம் விட்டுவிட முடியாது. ஆஸ்திரேலிய அணி தடுமாறும்போதெல்லாம், அந்த அணிக்கு கைகொடுப்பது ஸ்மித்துக்கு கைவந்த கலை. அதனால் எந்த நேரமும் அவர் பழைய நிலைக்கு வந்து சதம் அடிக்க வாய்ப்பு உள்ளது.
மிட்செல் ஸ்டார்க்:
அடிலெய்ட் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது. இதுபோன்று இளஞ்சிவப்பு நிற பந்துகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் பல விக்கெட்களை கொய்த பெருமை மிட்செல் ஸ்டார்க்குக்கு உண்டு. அதனால் அவர் மீது ஒரு கண் வைப்பது இந்திய அணிக்கு நல்லது.