கனடா நாட்டு பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ருடோ விலகுவாதாக அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் அந்நாட்டின் புதிய பிரதமராக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ கடந்த 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அந்நாடு இப்போது பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதனால் ஜஸ்டின் ட்ருடோவின் செல்வாக்கு, அந்நாட்டு மக்களிடையே குறைந்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில் கனடா மீது அதிக அளவில் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மக்களிடையே செல்வாக்கை இழந்தது மற்றும் கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால், கனடா நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலக ஜஸ்டின் ட்ருடோ முடிவு செய்துள்ளார். இதனை அவர் நேற்று அறிவித்தார். அதேவேளை, நாட்டின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்கால பிரதமராக தொடர்ந்து செயல்படுவதாக ட்ரூரோ அறிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ருடோ அறிவித்துள்ள நிலையில். அவருக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான விவாதங்கள் கனடாவில் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த், பிரதமராக பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த அனிதா ஆனந்த்?
கனடா அமைச்சரவையில் தற்போது போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சராக அனிதா ஆனந்த் இருக்கிறார். 1967-ம் ஆண்டு பிறந்த அனிதா ஆனந்த், கடந்த 2019-ம் ஆண்டுமுதல் தீவிர அரசியலில் இருந்துவருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் கனடாவின் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார்.
வழக்கறிஞர் படிப்பை முடித்தவரான அனிதா ஆனந்த்தின் அப்பா ஆனந்த் ஒரு தமிழர். அவரது அம்மா சரோஜ் டி ராம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு கீதா மற்றும் சோனியா அனந்த் என இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவரது தாத்தா வி.ஏ.சுந்தரம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
அனிதா ஆனந்த் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வுகளில் கலை பட்டம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டவியல் பட்டம், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டம், மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.