தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா சென்னையில் இன்று (03-04-23) காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர், எதிர்கட்சி தலைவர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு இங்கே.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்: ‘திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி: “தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளரும் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். சிறந்த முறையில் கழகப் பணிகளை ஆற்றியவர். தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் திரைப்படத் துறையினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும்.”
பாரதிராஜா: “என் மாணவன் மனோபாலா மறைவு, எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.”
ரஜினிகாந்த்: “பிரபல இயக்குநரும் நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.”
கமல்ஹாசன்: “இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
ராதிகா: “இதயம் நொறுங்கியதாக உணர்கிறேன். இன்று காலையில்தான் அவரிடம் போனில் பேசினேன். இருவரும் சிரித்து, சண்டையிட்டு, சாப்பிட்டு பல விஷயங்களை பற்றிய் பேசியுள்ளோம், நாம் அனைவரும் அவரை மிஸ் செய்வோம்.”
சரத்குமார்: “தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் அருமை நண்பருமான மனோபாலா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. 1982-ல் ‘ஆகாய கங்கை’ திரைப்படத்தை இயக்கி, கலைப்பயணத்தை துவங்கிய அவரது மொத்த இயக்க படங்கள் 24–இல் நான் நடித்த ‘வெற்றிப்படிகள்’ திரைப்படமும் ஒன்று. நட்புக்காக, சமுத்திரம், திவான், காஞ்சனா, சென்னையில் ஒரு நாள், வைத்தீஸ்வரன் உட்பட பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை இப்போது நினைவுகூர்கிறேன்.
தமிழ்த் திரையுலகில் தனி அடையாளத்தை நிரூபித்து, ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி பிரிந்திருக்கும் மனோபாலாவின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும் உற்றார், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
டி.ராஜேந்தர்: “இயக்குநரும் நடிகருமான மனங்கவர் மனோபாலா மறைந்துவிட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது.
அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”
தம்பி ராமையா: “மனோபாலாவின் இழப்பு, மிகப் பெரிய இழப்பு. அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாதவர் மனோபாலா. உழைக்காமல் அவரால் இருக்க முடியாது. விவேக், மயில்சாமி, மனோபாலா என அடுத்தடுத்த இறப்புகள் கொடுமையானது.”
கவுதம் கார்த்திக்: “மனோபாலா நம்மோடு இல்லை என்ற செய்தி என் இதயத்தை நொறுக்கியது. உங்களோடு பணியாற்றியது உண்மையில் ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமாக இருந்தது. நிச்சயமாக உங்களை மிஸ் செய்வோம்.”
சிங்கமுத்து: “மனோபாலா எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்; வரிசையாக சினிமா பிரபலங்கள் உயிரிழப்பது வருத்தமாக உள்ளது. எல்லாருக்காகவும் முன்நின்றவர் அவர்.”
கார்த்தி: “இந்தச் செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். எல்லா இடங்களிலும் எல்லாருக்காகவும் இருந்த ஒரு மனிதர். உங்களை மிஸ் செய்கிறேன் மனோபாலா.”
சேரன்: “தாங்க முடியாத செய்தி. மனதை உலுக்கி எடுக்கிறது. நான் பெற்ற உங்கள் அன்பு மறக்க முடியாதது. போய் வாருங்கள் மாமா.”
சினேகன்: ”இயக்குநர், எழுத்தாளர், நடிகர் மாமனிதர் அண்ணன் மனோபாலாவின் மறைவு என்பது மனம் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் இழப்பாகவே நீள்கிறது. தம்பி என்று அவர் அழைக்கும்போது ஒரு தாய்மையின் உணர்வு தலைத்தூக்கி நிற்கும். மரணம் சில நேரங்களில் இப்படிதான் தவறு செய்துவிடுகிறது.”
சிற்பி: “என்னை ‘செண்பகத் தோட்டம்’ படத்தில் சிற்பி என்ற பெயரில் அறிமுகப்படுத்திய இயக்குனர் மனோபாலா இன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது .எனக்கும், இந்த திரையுலகத்திற்கும் மிகவும் பேரிழப்பாகும்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.”
பழநிபாரதி: “கலையுலகச் செயல்பாடுகளில் எல்லோருக்கும் எப்போதும் தோள்கொடுக்க முன்வந்து நிற்பவர் மனோபாலா. இயக்குநரும் நடிகருமான அவரது மறைவு பேரிழப்பு. 1997 ஆம் ஆண்டு அவர் இயக்கிய, பிரகாஷ்ராஜ் – சுகாசினி நடித்த ‘நந்தினி’ படத்தித்திற்கு சிற்பியின் இசையில் அனைத்துப் பாடல்களையும் நான்தான் எழுதினேன். ஒரு கவிஞனாக உனக்குப் பிடித்த மாதிரி எழுது என்றார். ஒரு வரியில்கூட மாற்றம் சொல்லவில்லை. கலைஞனை மதிக்கிற அந்த மகத்தான கலையுள்ளம் துடிப்பதை நிறுத்திக்கொண்டது துயரம். ஆழ்ந்த இரங்கல்.”
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்: “ஒரு நேர்காணல் பண்ணனும்னு இடையிடையே கேட்டுக்கொண்டிருந்தார். 28 ஆண்டுகளாகத் தெரியும். 90களில் சென்னையில் நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்வின் பழைய காணொளிப் பதிவை சென்ற ஆண்டு வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்தார். ஆழ்ந்த இரங்கல் மனோபாலா.”
பட்டுக்கோட்டை பிரபாகர்: “சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்! இனிமையாகப் பழகுவார்! புறம் பேசும் பழக்கமில்லை! எவர் மனமும் நோக ஒரு வார்த்தை பேசியதில்லை! சின்னத்திரையில் என் முதல் தொடரின் இயக்குனர். (ஜெயிப்பது நிஜம் – சத்யஜோதி). நேரிலும் போனிலும் நிறைய பேசியிருக்கிறோம். பழகியிருக்கிறோம். எப்போதும் எவரையும் ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். பல வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவைச் சந்திக்க வேண்டுமே என்றேன். அடுத்த நாளே நேரம் ஃபிக்ஸ் செய்து அழைத்துச்சென்று அறிமுகம் செய்தார் (ஸ்ரீ படப்பிடிப்பில்). திரைக்கதைப் பயிற்சி வகுப்பு நடத்துகிறேன் என்றதும் அத்தனை மகிழ்ந்தார். தன் செலவில் அதை முழுக்க வீடியோப் பதிவு செய்து இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்குப் போட்டுக்காட்ட முன்வந்தார். இப்போது சென்ற மாதம்கூட ஒரு சொந்தத் தயாரிப்புத் திரைப்படம் குறித்து பேசி திரைக்கதை, வசனத்திற்கு என்னை முடிவு செய்தார். அவர் பரத நாட்டியம் கற்றுக்கொண்டவர் என்பது பலருக்குத் தெரியாது. பலருக்கு நடிப்பில், இயக்கத்தில் அறிமுகமாக பாலமாக இருந்து உதவியவர். சொல்லிக்கொண்டே போகலாம். பேரதிர்ச்சி எனக்கு.
மனோபாலா சார்… உங்களை வழியனுப்ப என்னிடம் வார்த்தைகள் இல்லை! ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்!”