அகில இந்திய அளவில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 720 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மாணவரான பிரபஞ்சன்.
இதைத் தொடர்ந்து யார் இந்த பிரபஞ்சன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம்தான் பிரபஞ்சனின் சொந்த ஊர். அவரது அப்பாவும் அம்மாவும் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அப்பா ஜெகதீஷ் மேலக்கூர் அரசுப் பள்ளியில் வரலாற்று ஆசிரியர். அம்மா மாலா, கணித ஆசிரியர். அந்த வகையில் பார்த்தால் வரலாற்று ஆசிரியரின் மகன், இன்று வரலாறு படைத்திருக்கிறார்.
10-ம் வகுப்புவரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிரபஞ்சன், அதன் பிறகு, சிபிஎஸ்இ கல்விமுறைக்கு மாறியிருக்கிறார். சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயாவில் ஹாஸ்டலில் தங்கிப் படித்திருக்கிறார்.
நீட் தேர்வில் முதல் ரேங்க் வாங்கி தேர்ச்சி பெற்றுள்ள பிரபஞ்சன் இதுபற்றி கூறியதாவது;
கடந்த 2 ஆண்டுகளாக நான் தினமும் 15 மணி நேரம் கடுமையாக பயிற்சி செய்து வந்தேன். வாரந்தோறும் மாதிரி நீட் தேர்வுகளை எழுதி வந்தேன். ஒவ்வொரு தேர்விலும் 600 மதிப்பெண்கள் வரை பெற்றுவந்தேன். நீட் மெயின் தேர்விலும் 600 மதிப்பெண்கள் வரை பெறுவேன் என்று நினைத்திருந்தேன் ஆனால் தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய இந்த வெற்றிக்கு என் பெற்றோரும், ஆசிரியர்களுமே காரணம்.
நீட் கடினமான தேர்வு என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நாம் சரியாக பயிற்சி பெற்றால் அந்த தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
படிப்பைத் தவிர இசை, பேட்மிண்டன் ஆகியவறில் பிரபஞ்சனுக்கு ஆர்வம் அதிகம்.
பிரபஞ்சன் முதல் மாணவராக தேர்வு பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவரது அம்மா மாலா, ‘எங்கள் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவன் 700 மதிப்பெண்களுக்கு மேல் வாங்குவான் என்று நினைத்தேன். ஆனால் முதல் மாணவனாக தேர்ச்சி பெருவான் என்று எதிர்பார்க்கவில்லை’ என்றார்.