No menu items!

+2 முடித்த மாணவர்களில் 40 % கல்லூரி சேரவில்லை – தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

+2 முடித்த மாணவர்களில் 40 % கல்லூரி சேரவில்லை – தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களில் 40 சயில் சேரும்போது ஒவ்வொரு மாணவருக்கும் எமிஸ் (EMIS – Educational Management Information System) என்ற எண் கொடுக்கப்படுகிறது. அந்த மாணவர் உயர்கல்வியில் சேரும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி

உயர் கல்வி சேராத 40% மாணவர்கள்

பள்ளிக்கல்வியில் சேரும்போது ஒவ்வொரு மாணவருக்கும் எமிஸ் (EMIS – Educational Management Information System) என்ற எண் கொடுக்கப்படுகிறது. அந்த மாணவர் உயர்கல்வியில் சேரும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், அரசின் யுமிஸ் (University Managment Information System) செயலியில் அதைப் பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவான தரவுகளின்படி, இந்த வரும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் தற்போது வரை சென்னையில் 40% மாணவர்கள் உயர்கல்வியில் சேரவில்லை எனக் கூறப்படுகிறது. அதாவது சென்னையில் ஐந்து மாணவர்களில் இரண்டு பேர் உயர்கல்வியில் சேரவில்லை. இந்த தகவலை கல்வித்துறையின் தகவல் மைய அதிகாரி தெரிவித்தார்.

அதேநேரம், “இது தற்போது வரையிலான தரவுகள்தான். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த பின்னர் மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்,” எனவும் குறிப்பிட்டுள்ளார் அந்த அதிகாரி.

ஆனால், 2022-2023ஆம் கல்வியாண்டின் தரவுகளைப் பார்த்தாலும், தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 40% மாணவர்கள், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர்  கல்லூரியில் சேரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.  யுமிஸ் மூலமாக பதிவு செய்யப்பட்ட தரவுகளின் படி தமிழ்நாட்டில் 2022-23 கல்வி ஆண்டில் 3,97,809 மாணவர்களில் 2,39,270 பேர் மட்டும் உயர் கல்வியில் இணைந்துள்ளனர். அரசின் எமிஸ் மற்றும் யுமிஸ் செயலி வாயிலாக இது தெரிய வந்துள்ளது.

2022-23ஆம் கல்யாண்டில் “1,13,099 மாணவர்கள் உயர் கல்விக்காக விண்ணப்பிக்காமல் இருக்க வேண்டும் அல்லது அதுகுறித்த யுமிஸ்ஸில் போதிய தரவுகள் இல்லாமல் இருக்கலாம்” எனவும் தகவல் மைய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் இடைநிற்றலுக்கு என்ன காரணம்?

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பிறகு உயர்கல்வியைத் தொடர இயலாத மாணவர்களின் பின்னணியைக் கண்டறியும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை முயன்றது. அதில், குடும்பச் சூழல், உயர்கல்வியில் ஆர்வமின்மை, பெற்றோர் படிக்க அனுமதிக்காதது, வேலைக்குச் செல்வது, விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்கை கிடைக்காதது உள்படப் பல காரணங்களை மாணவர்கள் தரப்பில் முன்வைத்துள்ளனர்.

இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்கல்வியில் இணையாத மாணவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான குழுவில், மாவட்ட ஆட்சியர், திறன் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், உயர்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் வாயிலாகப் பல மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

உதாரணமாக, விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 17,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 17,198 பேர் (98.6%) உயர்கல்விக்குச் செல்ல உள்ளதாகவும் மீதம் உள்ள 308 மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் வி.பி. ஜெயசீலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘முன்பெல்லாம் பிளஸ் 2 முடித்தால் எதாவது ஒரு வகையில் பட்டம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 2017-க்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வும் பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வும் வந்தன. தற்போது மத்திய பல்கலைக் கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்கும்போது இவை பரவலாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தேர்வுகள் கல்வியின் மீதுள்ள நம்பிக்கையை இழக்க வைக்கின்றன.

பள்ளியில் மாணவர் பெறும் மதிப்பெண்ணை, உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளாமல் வேறொரு தேர்வு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவது மாணவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. நுழைவுத் தேர்வுகளை மையப்படுத்தியே அனைத்தும் இருப்பதால் பிளஸ் 2 வகுப்பில் பாடப்பிரிவை தேர்வு செய்வதில் மாணவர்கள் குழப்பம் அடைகின்றனர். அதுதான், இதுபோன்ற பிரச்னைகளுக்கும் அடிப்படையாக அமைகிறது.

காசிமேடு, நொச்சிக்குப்பம், என அனைத்தும் சேர்ந்ததுதான் சென்னை. அங்குள்ள சூழல்களைக் கவனித்தால் மாணவர்களின் நிலையை உணர முடியும். சமூகத்தில் ஒடுக்குமுறை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, நுழைவுத் தேர்வுகள், அரசுக் கல்லூரி, அரசுப் பல்கலைக்கழகங்களில் சுயநிதிப் பாடப் பிரிவுகள் என அனைத்தும் வணிகமயமாகிவிட்டன. இதனால் உயர்கல்வியை நோக்கி ஏழை மாணவர்கள் நகர முடியாத சூழல் ஏற்படுகிறது. குடும்பச் சூழல்களைச் சமாளிக்க வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பிளஸ் 2 வகுப்பில் 400 மாணவர்களுக்கு ஒரு தமிழ் ஆசிரியர் என்ற நிலை உள்ளது. 240 பேருக்கு ஒரு இயற்பியல் ஆசிரியர் இருக்கிறார். ஆய்வகங்களையும் அவரே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், 80 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சியைக் கொடுக்க முடிவதில்லை. மாணவர்களும் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகின்றனர். இந்த மதிப்பெண்ணுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் சீட் கிடைப்பதில்லை.

மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கூறினால், அதை எங்களின் சொந்தப் பிரச்னையாகப் பார்க்கின்றனர். அடிப்படைப் பிரச்னைகளை ஆராயாமல் முழுமையான தீர்வைத் தருவது கடினம்,” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கல்வியாளர் நெடுஞ்செழியன், “உயர்கல்விக்கான செலவு அதிகரித்துவிட்டதே மாணவர்கள் சேர்க்கை குறையக் காரணம்” என்கிறார்.

மேலும், “பிளஸ் 2 முடித்த பிறகு உயர்கல்வி சேரும்போது விண்ணப்பப் படிவத்தின் விலையே ஏழை மாணவர்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கச் சொல்கின்றனர். கிராமங்களில் பலரின் வீடுகளில் இணையதள வசதிகள் இல்லை. உயர்கல்வி பயில வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்தையும் அரசு இலவசமாகக் கொடுக்க வேண்டும்.

நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை ஓ.பி.சி பிரிவினர் 1,400 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டும். பொறியியல் கலந்தாய்வுக்கு 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக வாங்குகின்றனர். மத்திய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கலாம் என்பதே தமிழக மாணவர்களுக்குத் தெரிவதில்லை. கல்வியை அதிக செலவீனம் உள்ளதாக மாற்றியதுதான், உயர்கல்வியில் சேர்க்கை குறையக் காரணம்.

இந்தியாவில் உயர்கல்வி விகிதாரச்சாரம் என்பது 28.3 சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதம் என்பதில் இருந்து குறைந்து வருகிறது. மாணவர்களுக்குப் பல்வேறு நிலைகளில் அரசின் தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படுகிறது. அது கிடைக்கும் போதுதான் உயர்கல்வியை நோக்கி அவர்களை ஈர்க்க முடியும்,” என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

அரசு என்ன சொல்கிறது?

இதுகுறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறைச்செயலர் மதுமதி, “தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களைக் கண்காணிக்கிறோம். அவர்களுக்குப் படிப்பதில் ஆர்வம் இருக்கிறதா அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஆர்வம் உள்ளதா என்பதை அறிந்து வேலைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்.

மாணவர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால், அவர்களது மதிப்பெண் குறைவாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் மறுதேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர்கள் கல்லூரிகள் அல்லது தொழிற்கல்வியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம்.

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை செப்டம்பர், அக்டோபரில் இருந்தே தலைமை ஆசிரியர்கள் கவனிக்கத் தொடங்குகின்றனர். மாணவர் எத்தனை நாள் பள்ளிக்கு வருகிறார், எந்தப் பாடத்தில் ஆர்வம் குறைவு என்பதை முன்கூட்டியே கணிக்கின்றனர்.

யுமிஸ் செயலி கடந்த ஆண்டு முதல்தான் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல் படிப்பு சேர்க்கை முடியும்போதுதான் முழு விவரங்களும் தெரிய வரும்.

சூழல் என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால், அதை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. முதல் தலைமுறை பட்டதாரிகளாக எத்தனையோ பேர் வருகின்றனர். உயர்கல்வியில் இணைய முடியாமல் போவதற்கான காரணங்களைச் சரிசெய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...