Taste Atlas நிறுவனம் சமீபத்தில், உலகின் தலைசிறந்த வறுத்த சிக்கன் உணவுகளின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த உணவான சிக்கன் 65, 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் சிக்கின் எனப்படும் கொரிய ஃபிரைட் சிக்கன் முதலிடத்திலும் ஜப்பானைச் சேர்ந்த கரேஜ் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தை தான் சென்னையில் முதலில் செய்யப்பட்ட சிக்கன் 65ஐ பிடித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் செய்யப்படும் ஃபிரைட் சிக்கன் 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்தோனேசியாவின் அயாம் கோரெங் 5வது இடத்தைப் பிடித்துள்ளன. தொடர்ந்து சீனாவின் ஜாஜிஜி, தைவான் நாட்டை சேர்ந்த பாப்கார்ன் சிக்கன், உக்ரைனின் சிக்கன் கியேவ் ஆகியவை 6 முதல் 8 இடங்களைப் பிடித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த அயம் பென்யேட் மற்றும் அமெரிக்காவின் ஆரஞ்சு சிக்கன் முறையே 9 மற்றும் 10வது இடங்களைப் பிடித்துள்ளன.
சிக்கன் 65-ன் வரலாறு
இந்தியாவில் பெரும்பாலான உணவகங்களை ஆளும் சிக்கன் 65, 1965-ம் ஆண்டு புஹாரி ஹோட்டலில்தான் அறிமுகமானது. புஹாரி ஹோட்டலின் உரிமையாளரும், தென் இந்திய உணவுத்துறையின் முக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஏ.எம். புஹாரிதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.அந்த சிக்கனுக்குக் கிடைத்த வரவேற்பு அதிகமாக இருந்ததால், மிக குறுகிய காலத்திலேயே இந்தியா முழுக்க பிரபலமானது.
பிரியாணிக்கு புகழ்பெற்ற புஹாரி ஹோட்டல், 1951ம் ஆண்டு அண்ணா சாலையில் தொடங்கப்பட்ட்து. இந்த ஓட்டலில்தான் 1965-ம் ஆண்டு சிக்கன் 65 முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. 65-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதால் அதற்கு சிக்கன் 65 என்று பெயர் வந்த்தாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இதனைத் தயாரிக்க 65 சிறிய கோழி துண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், இது சிக்கன் 65 என்று அழைக்கப்படுவதாக ஒரு சிலர் கூறுகிறார்கள். வேறு சிலர் அதை காரமானதாக மாற்றுவதற்கு 65 பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறுகின்றனர். இதைத் தயாரிக்க 65 நாட்கள் பழமையான கோழி பயன்படுத்தப்பட்ட்தால் அதற்கு சிக்கன் 65 என்ற பெயர் வந்த்தாகவும், இராணுவ வீரர்கள் பார்வையிட்ட ஒரு ஹோட்டல் மெனுவில் 65 வது உணவாக இருந்ததால் இந்த பெயர் வந்ததாகவும் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.