நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்றை ஏபிபி செய்தி நிறுவனம் நடத்தியுள்ளது. சி-வோட்டர் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த கருத்துக் கணிப்பை ஏபிபி நடத்தியுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்குள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக 21 தொகுதிகளையும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.4,650 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 4,650 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக அதிக அளவில் கைப்பற்றப்பட்ட பணமாக இது உள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்முதல் இன்றுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக தினசரி 100 கோடி ரூபாயாவது கைப்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பணத்தைத் தவிர பரிசுப் பொருட்கள், மதுவகைகள் ஆகியவையும் இதுவரை ஏராளமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ரூ.3.99 கோடி விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு போலீஸ் சம்மன்
ரூ.3.99 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சத்தைக் கைப்பற்றினர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரிக்க கோவர்த்தனுக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “சம்மன் தொடர்பாக எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அமைச்சர் துரைமுருகன் தொடர்புடையவர்கள் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்துள்ளனர். அவர்களுக்கு சம்மன் அனுப்பவில்லை. தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கும் சம்மன் அனுப்பவில்லை. எனது நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளால் எனக்கு எந்த மனஅழுத்தமும் இல்லை. ஒருதலைபட்சமாக தொடர்ந்து சோதனை நடத்துவதால், எங்களால் முறையாகப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை” என்றார்.