காய்கறிகளை வாங்க நுகர்வோர் செலவழிக்கும் பணத்தில், மூன்றில் ஒரு பங்குதான் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு செல்கிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
காய்கறிகள் மற்றும் பயிறு வகைகளின் விலை மற்றும் பணவீக்கத்தைப் பற்றிய ஆய்வு ஒன்றை மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்தியது. இந்த ஆய்வில், காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க நுகர்வோர் செலவழிக்கும் மொத்த தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விவசாயிகளை சென்றடைவதாக தெரியவந்துள்ளது.
இதன்படி தக்காளியின் விலையில் 33 சதவீதமும், வெங்காயத்தின் விலையில் 36 சதவீதமும், உருளைக்கிழங்கின் விலையில் 37 சதவீதமும் விவசாயிகளை சென்றடைவதாக தெரியவந்துள்ளது.
பழங்களைப் பொறுத்தவரை வாழைப்பழத்தின் விலையில் 31 சதவீதமும், திராட்சையின் விலையில் 35 சதவீதமும், மாம்பழத்தின் விலையில் 43 சதவீதமும் மட்டுமே விவசாயிகளைச் சென்று சேர்கிறது. மீதமுள்ள தொகை இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளைச் சென்று சேர்வதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மாம்பழங்களுக்கு ஏற்றுமதி மதிப்பு அதிகம் என்பதால், அதன் விலையில் விவசாயிகளுக்கு 43 சதவீதம் கிடைக்கிறது.
காய்கறி மற்றும் பழங்களில் விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கும் நிலையில், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதன் விலையில் 70 சதவீதம் வரை சென்று சேர்கிறது. அதேபோல் பயறு மற்றும் பருப்பு வகைகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கும், அதன் விலையில் 70 முதல் 75 சதவீதம் வரை சென்று சேர்கிறது. முட்டையை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அதன் விலையில் 75 சதவீதம் வரை கிடைக்கிறது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் எளிதில் கெட்டு விடுவதாலும், அதை பாதுகாத்து வைக்க போதிய ஏற்பாடுகள் இல்லாததாலும், அவற்றின் விலையிலொ பெரும்பான்மை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.