இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் வென்றதன் மூலம் இதுவரை ஒரு போட்டியில்கூட தோற்காத கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. அந்தப் பெருமையைவிட வித்தியாசமான மற்றொரு பெருமையும் ஹர்திக் பாண்டியாவுக்கு உண்டு.
இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே முடி வெட்டுவதற்கு அதிக பணத்தை செலவு செய்பவர் ஹர்த்திக் பாண்டியாதான். ஒவ்வொரு முறை முடி வெட்டுவதற்கும் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கிறார் ஹர்த்திக் பாண்டியா. இந்தியாவின் புகழ்பெற்ற சிகை அலங்கார நிபுணரான ஆலிம் ஹகிம்தான் அவரது ஹேர்டிரஸ்ஸர்.
ஒருமுறை ஷிகர் தவன் விளையாட்டாக அவரது தலைமுடியை கத்திரிக்கோலால் கொந்திவிட, அதை ஆலிம் ஹகிம்தான் சிறப்பாக மாற்றி வடிவமைத்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டுமுதல் பல்வேறு ஹேர்ஸ்டைல்களில் ஹர்த்திக் பாண்டியா தோன்றுவதற்கும் ஆலிம் ஹகிம்தான் காரணம்.
இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் ஹர்திக் பாண்டியா, முடி வெட்டுவதற்கு மட்டுமின்றி பல்வேறு விஷயங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கிறார். கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக விலைமதிப்புள்ள கார், வாட்ச் ஆகியவற்றையும் அவர்தான் வைத்திருக்கிறார்.
60 குழந்தைகளின் அப்பா
உலகிலேயே அதிக குழந்தைகளுக்கு அப்பாவானவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்தார் ஜான் முகமத் கான் கிஜ்ஜி. குவெட்டா நகரைச் சேர்ந்த இவருக்கு இப்போது 60-வது குழந்தை பிறந்துள்ளது. 3 மனைவிகள் மூலம் இந்த குழந்தைகளைப் பெற்றுள்ளார் கிஜ்ஜி. இதற்கு மேலும் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது என்று 3 மனைவிகளும் கராறாகச் சொல்லிவிட்டதால் 4-வது திருமணத்துக்காக பெண் பார்த்து வருகிறார். இவரது வயது 50.
”எனக்கு மகள்களை விட மகன்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதை சரிசெய்ய எதிர்காலத்தில் நிறைய மகள்கள் எனக்கு பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகத்தான் அடுத்த திருமனத்துக்கு பெண் பார்க்கிறேன். 3 மனைவிகளும், 60 குழந்தைகளும் இருப்பதால் குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கு 4 கார்களையாவது பிடிக்கவேண்டி இருக்கிறது. பாகிஸ்தான் அரசு எனக்கு ஒரு பேருந்தை இலவசமாக வழங்கினால் நன்றாக இருக்கும். நான் என் குடும்பத்துடன் பாகிஸ்தான் முழுக்க சுற்றி வருவேன்” என்று பாகிஸ்தான் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார் கிjஜி.
இனியும் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள கிஜ்ஜி திட்டமிட்டுள்ளதால், அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க பேருந்தைவிட ஒரு ரயிலை பாகிஸ்தான் அரசு அவருக்கு இலவசமாக கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவின் பிரம்மாண்ட சொகுசுக் கப்பல்
முழுக்க முழுக்க நதியில் செல்லக்கூடிய மிகப்பெரிய கப்பலின் பயணத்தை வரும் 13-ம் தேதி தொடங்கிவைக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. வாரணாசியில் இருந்து வங்கதேசம் வரை செல்லக்கூடிய இந்த கப்பலுக்கு ‘கங்கா விலாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.