No menu items!

அருந்ததி ராய் மீது யு.ஏ.பி.ஏ வழக்கு – ஏன்?

அருந்ததி ராய் மீது யு.ஏ.பி.ஏ வழக்கு – ஏன்?

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த யு.ஏ.பி.ஏ. சட்டம் என்பது என்ன? அருந்ததி ராய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது?

யு.ஏ.பி.ஏ சட்டம் என்பது என்ன?

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பொருளாதாரம், இறையாண்மை ஆகியவற்றுக்கு ஆபத்து விளைவிக்கும் குற்றங்களை விசாரிக்கும் சட்டப்பிரிவு யு.ஏ.பி.ஏ. இது 1967இல் கொண்டுவரப்பட்டது. அதில் 2008, 2012ஆம் ஆண்டுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் கடுமையாக்கப்பட்டது. இதற்குப் பிறகு, மோடி அரசாங்கம் 2019இல் இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து, இன்னும் கடுமையாக்கியது.

யு.ஏ.பி.ஏ சட்டத்தின் 15வது பிரிவின்படி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதத்தை பரப்புதல், பயங்கரவாதத்தை தூண்டுதல், அல்லது அத்தகைய குற்றத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவது ஒரு ‘பயங்கரவாதச் செயல்’ என வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறையில் குண்டு வெடிப்புகள் முதல் கள்ள நோட்டு வணிகம் வரை அனைத்தும் அடங்கும்.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகள் பற்றிய தெளிவான வரையறையை வழங்குவதற்கு பதிலாக, பிரிவு 15இல் கொடுக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதச் செயல்’ என்பதன் வரையறையின்படியே அவற்றின் அர்த்தங்கள் இருக்கும் என்று மட்டுமே யு.ஏ.பி.ஏ சட்டம் கூறுகிறது.

யு.ஏ.பி.ஏ சட்டப்பிரிவு 35இல், வழக்கு முடிவு செய்யப்படுவதற்கு முன்பே, எந்தவொரு நபரையும் அல்லது அமைப்பையும் ‘பயங்கரவாதி’யாக அறிவிக்கும் உரிமை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததி ராய் மீது ஏன் வழக்கு?

‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ (சிறிய விஷயங்களின் கடவுள்) என்ற நாவலுக்காக, 1997-ஆம் ஆண்டு ஆங்கில நாவல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘புக்கர் பரிசை’ வென்றதன் மூலம் உலகளவில் பிரபலமானவர் இந்திய நாவலாசிரியரும் கட்டுரையாளருமான அருந்ததி ராய். சூழலியல் ஆர்வலராக அறியப்படும் அருந்ததி ராய், சமூக ஆர்வலர் மேதா பட்கருடன் இணைந்து நர்மதை அணை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்றார். தொடர்ந்து, மாவோயிசம், காஷ்மீர் பிரச்னை ஆகிய சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

1989-ஆம் ஆண்டில் ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ என்ற படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார். எனினும், 2015-ஆம் ஆண்டில், “மதச் சகிப்புத்தன்மை மற்றும் இந்தியாவில் வலதுசாரி குழுக்களால் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிராக,” அவர் அந்த விருதைத் திருப்பி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான், 13 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததி ராய் பேசியதாக சொல்லப்படும் புகாரின் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத்துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) பிரிவு 45 (1)-இன் கீழ் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை துணைநிலை ஆளுநர் எடுத்திருக்கிறார்.

தொடர்புடைய சம்பவத்தில் சுஷில் பண்டிட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 28.10.2010 அன்று வழக்குத் தொடரப்படப்பட்டது. முன்னதாக, 2023 அக்டோபரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A / 153B மற்றும் 505-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக இருவர் மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு (சி.ஆர்.பி.சி) 196-இன் கீழ் வழக்குப்பதிவு செய்ய துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் எல்.டி.ஜி அரங்கில், 21.10.2010 அன்று ‘ஆசாதி – தி ஒன்லி வே’ (‘சுதந்திரம் தான் ஒரே வழி’) என தலைப்பிடப்பட்ட மாநாடு ஒன்றில் பேசும்போது, அருந்ததி ராய், ஷேய்க் ஹுசைன் இருவரும் ‘அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்’ பேசியதாகப் புகார் எழுந்தது. மேலும், இந்த மாநாட்டில், ‘இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்கும் வகையில்’ பிரசாரம் செய்யும் விதமாக பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது.

குறிப்பாக, ‘காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை’ என்றும் ‘இந்திய ஆயுதப் படையால் வலுக்கட்டாயமாக காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும்’, ‘இந்திய அரசிடமிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுதந்திரத்திற்காக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்’ எனவும் கிலானி, அருந்ததி ராய் தீவிரமாகப் பிரசாரம் செய்யும் வகையில் பேசியதாகவும், இந்தப் பேச்சுக்களின் பதிவுகளும் புகார் அளித்த சுஷில் பண்டிட்வால் புகாருடன் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சுஷில் பண்டிட் சி.ஆர்.பி.சி பிரிவு 156 (3)-இன் கீழ், டெல்லி எம்.எம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, 27.11.2010 அன்று தேதியிட்ட உத்தரவின்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கான வழிமுறைகளுடன் இந்தப் புகாரை நீதிமன்றம் முடித்துவைத்தது. அதன்படி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் அனுமதி ஏன் அவசியம்?

தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், தேசத் துரோகம் உள்ளிட்ட குற்றச் செயல்களை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமானால், அரசிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். இதனடிப்படையில்தான், அருந்ததி ராய் மீதான புகாரின் மீது வழக்குத் தொடர, டெல்லி யூனியன் பிரதேச அரசிடம் போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அருந்ததி ராய், ஷேக் சௌகத் உசைன் ஆகியோர்மீது (சயீத் அலி ஷா கிலானி இறந்துவிட்டதால், அவர் இதிலிருந்து விடுவிக்கப்பட்டார்) குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்திருக்கிறார்.

யு.ஏ.பி.ஏ. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

கடந்த சில ஆண்டுகளாக யு.ஏ.பி.ஏ வழக்குகள் அதிகளவில் பதியப்பட்டு வருகின்றன என்றும் கருத்து வேறுபாடுகளை முடக்குவதற்கு அரசாங்கம் இதனைப் பயன்படுத்துவதாகவும் சில அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

2016 – 2019 ஆண்டுகளுக்கு இடையில், 5,922 வழக்குகள் ‘யு.ஏ.பி.ஏ’ இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2021ஆம் ஆண்டு அறிக்கையில், இந்தக் காலகட்டத்தில் இவர்களில் 132 பேர் மீது மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் யு.ஏ.பி.ஏ-இன் கீழ் 1,948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ராஜ்யசபாவில் தெரிவித்தார். அந்த ஆண்டு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதால் 64 பேரை நீதிமன்றம் விடுவித்தது.

2018ஆம் ஆண்டு யு.ஏ.பி.ஏ- சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 1,421 பேரில், நான்கு வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி பெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 68 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

மொத்தத்தில் இந்தச் சட்டத்தின் கீழ், 2016 முதல் 2019 வரை கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சதவீதத்துக்கும் சற்றே அதிகமானவர்கள் மீது மட்டுமே அரசாங்கத்தால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டு பீமா கோரேகானில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகுதான் யு.ஏ.பி.ஏ-இன் கீழ் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பீமா கோரேகான் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள சிரூர் தாலுகாவின் பீமா ஆற்றாங்கரையில் உள்ள ஒரு சிற்றூர். இங்கு 1818இல் மராத்திய பேஷ்வா படைகளுக்கும் – கிழக்கிந்தியக் கம்பெனி படைக்களுக்கும் இடையில் போர் நடைபெற்றது. இதன் 200ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக பீமா கோரேகானில் ஒரு பெரிய கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது தலித் மற்றும் மராத்தா குழுக்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.

இந்த கலவரத்தில் வன்முறையைத் தூண்டியதாக பல சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்க ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது, அவர்களில் சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பலர் இன்னும் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் அண்டு டெல்லி கலவரம் தொடர்பாக ஜேஎன்யூ முன்னாள் மாணவர் உமர் காலித் இந்த சட்டப்பிரிவின் கைது செய்யப்பட்டார். அன்று முதல் சிறையில் இருந்து பல முறையீடுகள் செய்த போதிலும், அவரால் இன்னும் ஜாமீன் பெற முடியவில்லை.

சமீபத்தில் நியூஸ்க்ளிக் (Newsclick) ஊடக நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா, அதன் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் வழக்கில் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மீதும் யு.ஏ.பி.ஏ விதிக்கப்பட்டது. அவருக்கு சமீபத்தில்தான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...