நபிகள் நாயகம் குறித்த பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சின் காரணமாக இந்தியப் பொருட்களுக்கு வளைகுடா நாடுகளில் எதிர்ப்பு எழுந்துள்ள அதே நேரத்தில் நம்ம ஊர் சாணிக்கு அங்கே வரவேற்பு அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் இருந்து 192 மெட்ரிக் டன் சாணியை குவைத் நாட்டுக்கு அனுப்பும் ஒப்பந்ததைப் பெற்றுள்ளது ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ’சன்ரைஸ் அக்ரிலேண்ட் அண்ட் டெவலப்மென்ட் ரிசர்ச் பிரைவெட் லிமிடட்’ என்ற நிறுவனம். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பசு சாணத்தை சேகரித்து அதை வரட்டியாக மாற்றி குவைத்துக்கு அனுப்பும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
“இந்திய மாடுகளின் கழிவுக்கு வளைகுடா நாடுகளில், குறிப்பாக குவைத்தில் அதிகமான கிராக்கி உள்ளது. அங்குள்ள விவசாய நிலங்களில் உரங்களாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 192 மெட்ரிக் டன் சாணியை குவைத்துக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாணத்தை திரட்டி மிகப்பெரிய கன்டெய்னர்களில் அடைத்து வருகிறோம். ஜூன் 15-ம் தேதி முதல் தவணையை அனுப்பிவைக்க உள்ளோம்” என்கிறார் ’சன்ரைஸ் அக்ரிலேண்ட் அண்ட் டெவலப்மென்ட் ரிசர்ச் பிரைவெட் லிமிடட்’ நிறுவனத்தின் இயக்குநரான பிரசாந்த் சதுர்வேதி.
இன்று – ஜூன் 15 ல் சரக்கு ரயிலில் கனகபுரா ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் சாணி, பின்னர் கப்பல் மூலமாக குவைத் நாட்டுக்கு சென்று சேர்கிறது.
இந்த சாணி மட்டுமின்றி வீட்டு விலங்குகளைச் சார்ந்த பல்வேறு பொருட்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
‘ஆர்கானிக் ஃபார்மர் புரொட்யூசர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ (Organic Farmer Producer Association of India) அமைப்பின் தேசியத் தலைவரான அதுல் குப்தா இதுபற்றி கூறும்போது, “இந்தியாவைச் சேர்ந்த இயற்கை உரங்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. இந்த உரங்களைப் போட்டால் பயிர் மிகச் சிறப்பாக வளர்ந்து உற்பத்தியில் நல்ல லாபத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை வெளிநாட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.
குறிப்பாக மாட்டுச் சாணத்தை காயவைத்து பொடியாக்கி, அதை உரமாக பயன்படுத்தினால் பேரீச்சம்பழத்தின் மகசூல் அதிகரிக்கும் என்று குவைத் நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதனால் மாட்டுச் சாணத்துக்கு குவைத் நாட்டில் சாணத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுபோல் இயற்கை உரங்களுக்காக ஆண்டுதோறும் 27,155 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டு விலங்குகளுக்கான பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.” என்றார்.
இந்தியா மட்டுமின்றி மாலத்தீவு, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பசுஞ்சாணத்தை குவைத் நாடு இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாணிக்கு இனி இந்தியாவில் டிமாண்ட் அதிகரித்துவிடும்.