தமிழகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொதுவாக நாலைந்து படங்கள் வெளியாகும். சில சமயம் ஒன்றிரண்டு அதிகரிக்கலாம். ஆனால், இந்த வாரம் 13 படங்கள் வெளியாகியுள்ளன. ஏனிந்த பாய்ச்சல், எதற்காக இந்த அவசரம் என்று கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்தோம்.
‘‘ஆம், தம்பிராமையா நடித்த ‘ராஜாகிளி’, சமுத்திரக்கனி நடித்த ‘திரு.மாணிக்கம்’, சரத்குமாரின் ‘ஸ்மைல் மேன்’, கிச்சா சுதீப் நடித்த ‘மேக்ஸ்’, மோகன்லாலின் ‘பரோஸ்’, நிவேதாதாமஸ் நடித்த ‘35 சின்ன விஷயமில்ல’, குணாநிதி நடித்த ‘அலங்கு’, மற்றும் ‘மழையில் நனைகிறேன்’, ‘இது உனக்கு தேவையா?’ ‘வாகை’, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’, ‘பிடி’, ‘பீமா’ என 13 படங்கள் ரிலீஸ். இதில் டப்பிங் படங்களும் அடக்கம். இந்த வாரம் ஆண்டு கடைசி என்பதால் இவ்வளவு படங்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டுடன் படத்தை ரிலீஸ் செய்து, லாப நஷ்ட கணக்கை முடித்துக்கொள்வோம் என்று பல தயாரிப்பாளர்கள் கருதியதால் இந்த முடிவு. அதேபோல், வேறு சிலர் இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்தால் அரசு மானியத்துக்கு அப்ளை செய்யலாம் என கருதி படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.
இன்னும் சில தயாரிப்பாளர்களோ, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தியேட்டர் கிடைக்க வாய்ப்பில்லை.ஜனவரி 10ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆகிறது. அடுத்து விக்ரம் நடித்த வீரதீரசூரன் படம் வருகிறது. நாம் அந்த படங்களுடன் போட்டி போட முடியாது. கிறிஸ்துஸ், புத்தாண்டு விடுமுறை வருவதால் இது சரியான நேரம் என்று ரிலீஸ் செய்துவிட்டனர். வரிசையாக அடுத்தடுத்து பெரிய படங்கள் வருவதால் இந்த வாரம் மொத்தமாக இவ்வளவு படங்கள் ரிலீஸ் ஆகிறது ’என்கிறார்கள்
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் 2024-ம் ஆண்டு வெற்றி விகிதம் மோசமாக இருக்கிறது. தீபாவளிக்கு வந்த அமரன் படத்துக்குபின் பெரியளவில் எந்த படமும் ஹிட்டாகவில்லை.விடுதலை2 கூட ஓகே ரகம்தான். தெலுங்கு படமான புஷ்பா2 ஹிட். மற்றபடி, பல படங்கள் தோல்வி. இந்த சூழலில் இந்த வாரம் 13 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. மாச கடைசி, மழை என மக்கள் திணறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இத்தனை படங்கள் ரிலீஸ் என்பது தவறான முடிவு.