இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இலவச திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என்று சிலர் கருதுகின்றனர். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இலவசத் திட்டங்கள் சரியா, அதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா என்ற விவாதம் நாடு முழுவதும் எழுந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பேசியது வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரதமருக்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், “உங்கள் (மோடி) நண்பர்களின் ஆயிரம் கோடி ரூபாய்க் கடன்களை ரத்து செய்வதும், வெளிநாட்டு அரசுகளின் ஒப்பந்தங்களை உங்கள் நண்பர்களின் நிறுவனங்களுக்கு வழங்குவதும்தான் இலவசங்களைக் காட்டி ஏமாற்றும் செயல்” என்று காட்டமாக பதில் கூறியிருந்தார். கெஜ்ரிவாலின் இந்த கருத்தும் இணையத்தில் வைரலானது.
சரி, மோடி பிரதமரான பின்னர் ரத்து செய்யப்பட்ட வங்கிக் கடன்கள் எவ்வளவு என்று பார்ப்போம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ தகவல்கள்படி 2004-05 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை தள்ளுபடி செய்யப்பட்ட கடன் விவரங்கள் வருமாறு:
2004-05: ரூ. 2,463 கோடி
2005-06: ரூ. 51 கோடி
2006-07: ரூ. 85 கோடி
2007-08: ரூ. 917 கோடி
2008-09: ரூ. 4,984 கோடி
2009-10: ரூ. 9,918 கோடி
2010-11: ரூ. 8,302 கோடி
2011-12: ரூ. 5,613 கோடி
2012-13: ரூ. 11,355 கோடி
2013-14: ரூ. 19,815 கோடி
2014-15: ரூ. 60,197 கோடி
2015-16: ரூ. 72,501 கோடி
2016-17: ரூ. 1,07,823 கோடி
2017-18: ரூ. 1,62,733 கோடி
2018-19: ரூ. 2,36,725 கோடி
2019-20: ரூ. 2,37,924 கோடி
2020-21: ரூ. 2,08,134 கோடி
2021-22: ரூ. 1,74,968 கோடி
இதன்படி மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2004 முதல் 2014 வரையான பத்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட மொத்த வராக் கடன் தொகை ரூ. 63,503 கோடி. மோடி பிரதமரானதும் முதல் நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ. 60,197 கோடி. அதாவது 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் அரசு செய்த தள்ளுபடியை கிட்டத்தட்ட ஒராண்டிலேயே செய்தது மோடி அரசு. அதன்பின்னர் வருடம் தோறும் அது அதிகரித்து வந்ததே தவிர குறையவில்லை. உச்சபட்சமாக 2019-20 நிதியாண்டில் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 924 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. சென்ற நிதியாண்டில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 968 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2014இல் மோடி பிரதமரான பின்னரான கடந்த 8 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் தொகை 12 லட்சத்து 61 ஆயிரத்து 5 கோடி ரூபாய். இது, மன்மோகன் சிங்கின் பத்து ஆண்டுகள் தள்ளுபடியை விட கிட்டதட்ட 20 மடங்கு அதிகம்.
மேலும், வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தாதவா்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கி தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் மட்டும் 2,700 பேர் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. அதிகபட்சமாக 2,840 போ் 2020-21ஆம் நிதியாண்டில் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை.
இந்த வங்கிக் கடன் தள்ளுபடிகளில் 75 சதவீதத்துக்கு மேல் பொதுத்துறை வங்கிகளில்தான் நடந்துள்ளது. மேலும், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் பெருவாரியானவை, பெரும் நிறுவனங்களும் பெரும் பணக்காரர்களும் வாங்கியவையே.
பிரதமர் மோடியின் நண்பரும் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரருமான அதானி கடன் தள்ளுபடிகளும் இதில் அடங்கும். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட டிவிட்டில், “அதானி குரூப் சேர்மனான கவுதம் அதானி, கடன் வாங்கி திரும்ப செலுத்தாத பெரிய புள்ளி” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “தனது சொந்தப் பணத்தை முதலீடு செய்யாமல், பல ஆயிரம் கோடி வங்கிக் கடன் பெற்று தொழிலை விரிவாக்கி வருகிறார் அதானி. கடன் அளவை குறைக்காவிட்டால் பல்லாயிரம் கோடி வங்கிக் கடனை திருப்ப முடியாத சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அதானி குழுமம்” என்று ‘கிரெடிட் சைட்ஸ்’ சமீபத்தில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.