இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக ‘மகா கும்பமேளா’ விளங்குகிறது. பக்தர்களின் கூற்றுப்படி, கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஒருவரின் பாவங்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் ஆன்மீக சக்தியை மேம்படுத்தி, முக்தியை அடைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பாபிஷேக விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், சன்னியாசிகள், அகோரிகள், நாகா பாபாக்கள், மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் புனித நீராடி வருகின்றனர். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த மகா கும்பமேளா விழாவிற்கு இதுவரை 12 கோடிக்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வருடம் மௌனி அமாவாசை ஜனவரி 29 ஆம் தேதி வருகிறது. மௌனி அமாவாசை (Mauni Amavasai) இந்து மதத்தில் மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. மௌனி அமாவாசை நாளில், மக்கள் புனித நதிகளில் நீராடி, தான தர்மங்கள் செய்வார்கள். இந்த நாளில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. முன்னோர்கள் பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் செய்யப்படும் தானம் ஆகியவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த மௌனி அமாவாசைக்காக மகா கும்ப விழாவில் அதிகளவில் மக்கள் புனித நீராடி செல்வார்கள். இந்தநிலையில், பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசிக்கான விமானக் கட்டணம் 300% முதல் 600% வரை உயர்ந்துள்ளது.
Travel portal Skyscanner அறிக்கையின்படி, டெல்லி-பிரயாக்ராஜ் இடையே விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து பிரயாக்ராஜுக்கு டிக்கெட் விலை காலை 11 மணி நிலவரப்படி ரூ. 21,000 முதல் 30,000 மற்றும் டெல்லி முதல் வாரணாசி வரை ரூ. 20,000 முதல் 40,000 உயர்ந்துள்ளன. இதேபோல் பெங்களூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு ரூ. 26,000 முதல் ரூ. 48,000 வரை டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்திலோ அல்லது முக்கிய நிகழ்வுகளிலோ இந்த அதீத கட்டண உயர்வுகள் சமானிய மக்களிடையே நிதி சார்ந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.