No menu items!

11-வது அவதாரம் சிவாஜி கணேசன் – ஒய்.ஜி.மகேந்திரன்

11-வது அவதாரம் சிவாஜி கணேசன் – ஒய்.ஜி.மகேந்திரன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவருடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.

சிறுவயதில் நான் குட் ஷெப்பர்ட் கான்வெண்ட்டில்  படிக்கும்போது சிவாஜி நடித்த ‘படிக்காத மேதை’ படம் பார்த்தேன். அதற்கு முன்பு எனக்கு கத்திச்சண்டை காட்சிகள் உள்ள படங்களைத்தான் பார்க்க பிடிக்கும். ஆனால் படிக்காத மேதை படத்தைப் பார்த்த பிறகு நான் அவருக்கு அடிமையாகவே மாறிவிட்டேன்.

நான் நடித்த  ‘பெற்றால்தான் பிள்ளையா?’ என்ற நாடகத்தை சிவாஜியை வைத்து ‘பார் மகளே பார்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். நாடகத்தில் நாயகனுக்கு 2 மகன்கள் இருப்பார்கள். அதில் ஒரு மகனாக நான் நடித்திருந்தேன். அதே வேடம் படத்திலும் எனக்கு கிடைக்கும் என்று நம்பி இருந்தேன். ஆனால் படத்துக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ், அதில் 2 மகன்களுக்கு பதிலாக 2 மகள்கள் என்று மாற்றினார். அதனால் எனக்கு அந்த வாய்ப்பு பறிபோனது.

‘பார் மகளே பார்’ படத்தில் பறிபோன வாய்ப்பு எனக்கு  ‘கவுரவம்’ படத்தில் கிடைத்தது. ஆனால் அந்த படத்தின் டைட்டிலில் என் பெயரைப் போடவில்லை. இதனால் படம் பார்த்துவிட்டு வந்ததும் சிவாஜியை போனில் அழைத்து என் கோபத்தை வெளிப்படுத்தினேன். அதற்கு சிவாஜி, ‘டைட்டிலில் பேர் இருந்தாதானா? உன் நடிப்பைப் பார்த்து எல்லாரும் பேசுவாங்கடா’ என்று சமாதானப்படுத்தினார்.

படப்பிடிப்பு தளங்களில் அனாவசியமாக யாரிடமும் பேசும் வழக்கம் சிவாஜிக்கு இல்லை. தேவையான விஷயங்களை மட்டுமே பேசுவார். அதேபோல் படப்பிடிப்பில் தங்கள் காட்சிகளை படம் பிடிக்காதபோது வெளியில் போய் அரட்டை அடிப்பதை சிவாஜி ரசிக்க மாட்டார். “அடுத்தவங்களோட காட்சியை எடுக்கும்போது செட்லயே இருடா. மத்தவங்க நடிக்கும்போது அவங்க எப்படி நடிக்கறாங்கன்னு பார்த்தாதானே அதுக்கு ஏத்த மாதிரி நீயும் நடிக்க முடியும்’ என்று ஆலோசனை சொல்வார்.

சிவாஜியின் கடைசி காலங்களில் வாரம் ஒருமுறையாவது அவரைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். எப்போதாவது நான் செல்லாமல் இருந்தால் ராம்குமாரின் மனைவி எனக்கு போன் செய்து சிவாஜி என்னை அழைப்பதாகச் சொல்வார். நான் சென்று சந்தித்தால். ‘நீங்கல்லாம் பிசியாயிட்டீங்க. நான்தான் வீட்ல சும்மா இருக்கேன்’ என்று செல்லமாக கோபித்துக்கொள்வார்.

சிவாஜியைப் பொறுத்தவரை ஒரு படத்துக்கு யார் இயக்குநர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். யார் இயக்குநராக இருந்தாலும் அவர்களை மதிப்பார். தனக்கு கொடுத்த வேடத்தை தான் சரியாக செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார். அதுபோல் ஒரு இயக்குநர் தன்னிடம் எப்படி நடிக்கச் சொல்கிறாரோ, அப்படி நடித்து அவரை திருப்திப்படுத்துவார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்தபோது மதுரை சேதுராமன், பொன்னுசாமி ஆகிய இரண்டு நாதஸ்வர கலைஞர்களை வீட்டுக்கு அழைத்து அவர்கள் எப்படி வாசிக்கிறார்கள், உறையில் இருந்து எப்படி நாதஸ்வரத்தை எடுக்கிறார்கள் என்று பார்த்து கற்றுக்கொண்டு அதன் பிறகுதான் படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார். தெய்வமகன் படத்தில் வரும் 2-வது மகன் கதாபாத்திரத்துக்கு ஸ்ரீதரையே முன்னுதாரணமாக்க் கொண்டு நடித்த்தாக சொல்லி இருக்கிறார். தான் பார்க்கும் மக்களை அப்படியே நடிப்பில் பிரதிபலிப்பவர் சிவாஜி கணேசன். அதனால் நடிப்பை பொறுத்தவரை 11-வது அவதாரம் என்று சிவாஜியைச் சொல்லுவேன்.

சிவாஜியை நாடகம் பார்க்க அழைத்தால், மாலை 6.30-க்கு தொடங்கும் நாடகத்துக்கு 6.15-க்கே வந்துவிடுவார். குறித்த நேரத்தில் நாடகத்தை தொடங்காவிட்டால் நச்சரிப்பார். நேரம் தவறாமைக்கு ஒரு சிறந்த உதாரணம் சிவாஜி. படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். நான் சரியான நேரத்திற்கு செல்லாவிட்டால் திட்டுவார். அதேபோல் தன்னுடன் நடிப்பவர்களுக்கு மாலையில் நாடகம் இருந்தால், குறித்த நேரத்தில் அவர்களை படப்பிடிப்பில் இருந்து அனுப்பி வைப்பார். நாடகக் கலைஞர்களை அவர் பெரிதும் மதித்தார்.

இவ்வாறு ஒய்.ஜி.மகேந்திரன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...