வார்தா புயலின்போது சென்னையில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்த துயர சம்பவம் நம் நினைவில் இருந்து அத்தனை சீக்கிரத்தில் அகலாது. இப்போது அதைவிட துயரமான ஒரு நிகழ்வு தெலங்கானாவில் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த பெருமழையால் தெலங்கானாவில் குறிப்பிட்ட ஒரே இடத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
தெலங்கானா மட்டுமின்றி ஆந்திராவிலும் பல இடங்களில் பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த மழையில் தெலங்கானாவில் உள்ள 200 ஹெஜ்டேர் பரப்பளவு கொண்ட எடுர்நகரம் வனவிலங்கு சரணாலயத்தில் (Eturnagaram Wildlife Sanctuary) மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வீழ்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னையில் மரங்கள் வீழ்ந்தபோது, நாட்டு மரங்கள் அல்லாத வெளிநாட்டு பூமரங்களை நட்டதால் அவை வீழ்ந்ததாக சூழலியலாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இப்போது தெலங்கானாவில் வீழ்ந்திருக்கும் மரங்கள் பலவும் ஆலமரம், வேப்ப மரம், புங்கை மரம் போன்ற நாட்டு வகை மரங்கள்தான். இதனால் சூழலியலுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் கணக்கிட முடியாததாக உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தெலங்கானாவின் பஞ்சாயத் ராஜ் அமைச்சரான தனஸ்ரீ அனசூயா, “மழையில் இப்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் விழும் என்று நினைக்கவில்லை. இது மிகப்பெரிய நஷ்டம். இதுபற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தெலங்கானாவின் தலைமை வனப் பாதுகாவலர், “தெலங்கானாவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது மிகவும் அரிதானது. பலத்த காற்று மற்றும் மேக வெடிப்பு போன்ற காரணங்களால் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இந்த காற்று மற்றும் மழையால் ஏற்பட்ட நஷ்டத்தின் அளவு பற்றி வனத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்றார்.
இந்த மரங்கள் விழுந்ததற்கு கடந்த 31-ம் தேதியன்று பெய்த மழை ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதுபற்றி கருத்து கூறும் அவர்கள், “அன்றைய தினம் பலத்த காற்றுடன் பெய்த மழையானது உள்ளூரில் வீசிய ஒரு சூறாவளியைப் போன்று காட்சியளித்தது. இந்த சூறாவளி பற்றியும், அதன் தன்மை பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்” என்றனர்.
சுற்றுச்சூழல் ஆய்வாளரான தோந்தி நரசிம்ம ரெட்டி கூறும்போது, “பொதுவாக மேற்கு வங்க மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்தான் இதுபோன்ற சூறாவளிகள் வீசும். ஆனால் இப்போது முதல் முறையாக தெலங்கானா மாநிலத்தில் இப்படி ஒரு சூறாவளி வீசியுள்ளது. இது மிக அரிய சம்பவமாகும். தெலங்கானாவில் வீசிய சூறாவளி காற்றின் வேகம் துல்லியமாக தெரியவில்லை. ஆனால் மரங்கள் விழுந்து கிடப்பதைப் பார்க்கும்போது 90 கிலோமீட்டர் வேகம் வரையில் காற்று அடித்திருக்கும் என்று நினைக்கிறோம். பெரும்பாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட புதிய மரங்களே இந்த காற்றில் விழுந்துள்ளன. 50 ஆண்டுக்கும் மேலுள்ள மரங்களின் வேர் மண்ணுக்குள் வெகுதூரம் போவதால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.