சென்னையில் மொத்தம் 1,81,347 தெரு நாய்கள் இருப்பது மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் தொல்லைகளில் ஒன்றாக நாய்த் தொல்லை இருக்கிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஏராளமான நாய்கள் இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த ஜூலை 10-ம் தேதி சென்னை மாநகராட்சி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.
சென்னையில் உள்ள நாய்களின் பாலினம், அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட பல விபரங்கள் இந்த கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகள் மாநகராட்சி மேயர் பிரியா ராஜனிடம் வழங்கப்பட்டன.
சென்னையில் 2018-ஆம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கிடும் பணி நடைபெற்றபோது 59 ஆயிரம் நாய்கள்தான் இருந்தன. ஆனால் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற்ற கணக்கெடுப்பில் இந்த நாய்களின் எண்ணிக்கை 1,81,347-ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
அம்பத்தூரில் 23 ஆயிரம் நாய்கள்
சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 23,980 நாய்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக மாதவரம் மண்டலத்தில் 17,096 தெருநாய்கள் உள்ளன. கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 100 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 7 ஆயிரத்து 165 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் பேர் நாய்கடியால் மரணம்
சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே நேரத்தில், நாய்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதாக மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தியும் வந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் நடத்தியுள்ள ஒரு ஆய்வில், நம் நாட்டில் ஆண்டுதோறும், 20,000 பேர் நாய்க் கடியால் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக தெரிவித்துள்ளது; இது, உலகளவில் நாய் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில், 35 சதவீதமாகும். நம்நாட்டில் நாய்க்கடிக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2021ல் இருந்து படிப்படியாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2021ல் 17 லட்சம் பேர் நாய் கடிக்கு ஆளானதாகவும், 2022ல் இந்த எண்ணிக்கை 21.80 லட்சம், 2023ல் 30 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023ல் நாய் கடியால் பாதிக்கப்பட்டோர், 80 சதவீதம் அதிகம்.
தமிழ்நாட்டில்தான் நாய்க்கடி அதிகம்
இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், “கடந்த 2023ல் நம் நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 350 பேர் நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் நாய் கடிக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில், 2023ல்- 4.04 லட்சம் பேரை நாய் கடித்துள்ளது. இது, நாட்டின் மொத்த நாய் கடி பாதிப்பில், 13 சதவீதம். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் கர்நாடகா உள்ளது. அங்கு கடந்த ஆண்டில் இரண்டு லட்சம் பேரை நாய் கடித்துள்ளது” என்கிறது.
எதற்கும் சாலையில் போகும்போது நாய்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.