இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 16 சதவீத வாக்குகள்தாம் அதிமுகவுக்கு கிடைத்திருக்கிறது. இது போன்ற ஒரு நிலை இதற்கு முன்பு அதிமுகவுக்கு ஏற்பட்டதில்லை.
‘எனக்குப் பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் ஆளும்’ – 2016 ஜனவரி மாதம் சட்டப் பேரவையில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் சொன்ன வரி இது.
அவர் கூறி ஆறு வருடங்களில் அதிமுக இன்று பரிதாபமான நிலையை அடைந்திருக்கிறது. ஜெயலலிதாவின் கனவான நூறாண்டுகள் அல்ல அடுத்த ஆண்டையே எப்படி சமாளிக்கப் போகிறது அதிமுக என்ற நிலையில் கட்சி இருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வி, 2021ல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, இப்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி என தொடர் தோல்விகள் அதிமுகவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 16 சதவீத வாக்குகள்தாம் அதிமுகவுக்கு கிடைத்திருக்கிறது. இது போன்ற ஒரு நிலை இதற்கு முன்பு அதிமுகவுக்கு ஏற்பட்டதில்லை. இது போதாதென்று இபிஎஸ், ஓபிஎஸ் சசிகலா இடையிலான யுத்தத்தால் இன்று அதிமுகவே உடையும் நிலையில் இருக்கிறது.
அதிமுகவின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? அதிமுக இப்போது என்ன செய்ய வேண்டும்? இரட்டைத் தலமையின் குழப்பமும் ஒற்றத் தலைமையின் தேவையும்: ஓபிஎஸ் – இபிஎஸ் என கட்சிக்கு இரட்டைத் தலைமை இருப்பதுதான் அதிமுகவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கருதுகிறார்கள் கட்சி முன்னணியினர்.
எம்ஜிஆர் பிறகு அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா என ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக இருந்தபோது, கட்சி ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்தது. ஆனால், இன்று ஓபிஎஸ் – இபிஎஸ் என இரட்டைத் தலைமை இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் கட்சியில் சிக்கல் இருக்கிறது. கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரு தலைவர்களும் இணைந்து பரப்புரை மேற்கொள்ளவில்லை. இப்போதும் இணைந்து செயல்படவில்லை.
அதிமுக மேற்கு தெற்கு என்று பிரிந்து கிடக்கிறது என்பதை தொண்டர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
மேற்கு, வடக்கு மண்டலம் சார்ந்த முடிவுகளை இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் தென் தமிழகம் சார்ந்த முடிவுகளை ஓபிஎஸ் தரப்பினரும் எடுப்பதாக கூறப்படுகிறது. இதிலும் பல குழப்பங்கள் உள்ளன. ஒரு தரப்பினர் எடுக்கும் முடிவு எதிர் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்சியை வலுப்படுத்த பாமகவை கூட்டணியில் இணைக்க இபிஎஸ் முடிவெடுத்தார். இதற்காக வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இபிஎஸ் உத்தரவிட்டார். ஆனால், அவரது இந்த முடிவு தென் மாவட்டங்களில் உள்ள சில சமூகத்தினரிடையே எதிர்ப்பை சம்பாதித்து, கட்சியின் வெற்றியை பாதித்தது.
இரட்டைத் தலைமைக்கு உதவ ஒருங்கிணைப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால்… அந்தக் குழு எப்போது கூடியது? என்ன முடிவுகளை எடுத்தது? என்ன ஆலோசனைகளைத் தந்தது என்பது குறித்து அதிமுகவினர் யாருக்கும் தெரியவில்லை.
சமீபத்திய உதாரணமாக அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியது. இந்த சிக்கலை தீர்க்க அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து ஆலோசித்தார்களா? ஒருங்கிணைப்பு குழு கூடி பேசியதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த சிக்கலைத் தீர்க்க அதிமுக ஒற்றைத் தலைமையை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
சசிகலாதான் தீர்வா?
தொடர் தோல்விகளை தேடி கொடுத்திருக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களை இனி கட்சியினர் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி இந்த நகர்புறத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிறது.
அரசியலில் TINA Factor என்று ஒன்றை குறிப்பிடுவார்கள். There Is No Alternative – அதாவது வேறு மாற்று இல்லை என்பது. எடப்பாடி, ஓபிஎஸ்ஸை தாண்டி அதிமுகவில் வேறு மாற்று இல்லையா என்ற கேள்வி எழுந்தால் அதற்கு பதிலாக சசிகலா பெயரை முன்மொழிகிறார்கள் அதிமுகவின் ஆதரவாளர்கள். சசிகலாவுக்கு எதிராக முன்பு தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமே இப்போது இபிஎஸ்ஸை ஓரங்கட்டுவதற்காக மீண்டும் சசிகலா பக்கம் சாய்கிறார். இபிஎஸ்ஸிடம் நம்பர் 2-வாக இருப்பதைவிட சசிகலாவிடமே நம்பர் 2-வாக இருக்கலாம் என்பது ஓபிஎஸ்ஸின் எண்ணமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், சசிகலாவை இணைப்பது என்பது சசிகலா என்ற தனிநபரை இணைப்பது அல்ல அவரது குடும்பத்தை அதிமுகவுக்குள் கொண்டு வருவது போன்றது. அந்த அனுபவம் எப்படியிருக்கும் என்பது அதிமுகவினருக்கு தெரியும்.
அதுமட்டுமில்லாமல் சசிகலாவுக்கு அதிமுக தொண்டர்களிடம் முழுமையான ஆதரவு இருக்கிறதா என்ற கேள்வியும் இருக்கிறது. சசிகலா வெளிப்படையாக ஆடியோ வெளியிட்டு அழைத்தாலும் எந்த அதிமுக முன்னணியினரும் அவர் பக்கம் செல்லவில்லை. அவர்கள் இன்னும் எடப்பாடி, ஓபிஎஸ் பக்கம்தான் நிற்கிறார்கள். ஆனால், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு இந்த நிலை நீடிக்குமா? சசிகலாவுக்கான குரல்கள் அதிமுகவில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
பாஜக கூட்டணி குறித்து கட்சிக்கு பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அதன் சாதக பாதங்களை கட்சி ஆலோசித்ததா என்று தெரியவில்லை. இன்று கோவை போன்ற சில இடங்களில் திமுக வென்றதற்கு காரணமாக அதிமுக-பாஜக கூட்டணி முறிவு காரணமாக கூறப்படுகிறது.
எல்லோருக்குமான தலைமை
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் எல்லோருக்குமான தலைவர்களாக இருந்தார்கள். தமிழகத்தின் அனைத்து சமூகத்தினரிடமும் அவர்களுக்கு ஆதரவு இருந்தது. அவர்கள் சார்ந்த சமூகத்தை தாண்டி அனைத்து மக்களுக்கான தலைவர்களாக அவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அப்படி பார்க்கப்படுகிறார்களா என்பது முக்கியமான கேள்வி.
வடக்கு மற்று மேற்கு மண்டலத்தை சார்ந்தவர்கள் எடப்பாடியையும், தென் மண்டலத்தை சார்ந்தவர்கள் ஓபிஎஸ்ஸையும் தங்கள் தலைவராகப் பார்க்கிறார்கள். இந்த பிரிவினை அரசியல் அதிமுகவின் முக்கிய பலவீனமாக இருக்கிறது.
அனைத்து சமூகத்தினருக்கான கட்சி என்ற பிம்பத்திலிருந்து விலகியது ஒரு பலவீனம் என்றால் பாஜகவுடன் கூட்டணி கண்டதால் சிறுபான்மை மக்களின் ஆதரவும் அதிமுகவிடமிருந்து தள்ளிப் போய்விட்டது. இந்த பலவீனங்களிலிருந்து அதிமுக விடுபடுவது பெரிய சவாலாக இருக்கும்.
போராட்ட அரசியல்:
ஒரு எதிர்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழகத்தில் உதாரணமாக இருந்தவர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும். இப்போது முதல்வராய் உள்ள மு.க.ஸ்டாலினைக்கூட இந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம். நாளொரு ஆர்ப்பாட்டம், பொழுதொரு மறியல் என்று ஆளும் தரப்பை தூங்கவிடாமல் எதிர்த்து வந்தது இவர்களின் முக்கிய பலம்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதான எதிர்க்கட்சிக்கான போராட்ட உணர்வை வெளிப்படுத்த அதிமுக தவறிவிட்டது. மாறாக தங்களுக்குள் யுத்தம் நடத்தவே அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. பல கட்டங்களில் அதிமுகவினர் தீவிர போராட்டங்கள் நடத்தாமல் போராட்டம் என்று பெயரளவில் போராட்டங்கள் அறிவித்து போராட்டங்களை நடத்திய பத்திரிகை செய்திக்கு வேண்டுமானால் உதவலாமே தவிர மக்களிடம் செல்வாக்கு பெற உதவாது.
பாஜக ஜாக்கிரதை:
அதிமுக கோட்டை விடும் இடங்களில் பாஜக தன் இருப்பைக் காட்டியது. இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நாளில் திமுகவும், பாஜகவும் சரிக்குச் சரியாக முழுப் பக்க விளம்பரங்களைக் கொடுத்து வாக்காளர்களைக் கவர முயல, தங்களுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப் போல முடங்கிக் கிடந்தது அதிமுக. எந்த விளம்பரத்தையும் அதிமுக வெளியிடவில்லை.
இதனால் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி பாஜகவோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் சரிசெய்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது. தாங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும், அந்தக் கட்சியை தேய்த்து, தங்களை வளர்த்துக்கொள்வது பாஜகவின் குணம். மகாராஷ்டிராவில் சிவசேனா, பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், பஞ்சாப்பில் அகாலி தளம், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் என இதற்கு பல உதாரணங்கள். இதையெல்லாம் நன்கு தெரிந்தும் அக்கட்சியுடன் இணைந்திருப்பது அதிமுகவின் மற்றொரு பலவீனம்.
ஜெயலலிதா இல்லாத சூழலில், திமுக போன்ற மிக வலிமையான கட்சி ஆட்சியில் இருக்கும்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பலம் பொருந்திய பாஜகவுடன் நட்பில் இருப்பது அதிமுகவுக்கு அரசியல் தேவைதான். ஆனால், அதற்கு கொடுக்கும் விலை என்ன என்பதை அதிமுக சிந்திக்க வேண்டும்.
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் முழுமையான பலம் இல்லாத சூழலில் அவர்களை எதிர்க்க அதிமுக தயங்கத் தேவையில்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் என்று அதிமுக தலைவர்கள் தொடர்ந்து அதிமுகவை குறித்து கூறுவார்கள். அத்தனை பெரிய தொண்டர் பலம் கொண்ட் கட்சி ஏன் தயங்க வேண்டும்?
கூட்டணி வைப்பது மட்டுமின்றி, தங்கள் உள்கட்சிப் பஞ்சாயத்துகளுக்குகூட ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் அமித்ஷாவை சந்திக்க ஓடுவது அதிமுகவின் பலவீனத்தைக் காட்டுகிறது. இதனால் டெல்லி பாஜகதான் அதிமுகவின் மேலிடமோ என்ற எண்ணம் மக்களிடம் முழுமையாக ஏற்பட்டிருக்கிறது. இதைத் தவிர்க்க பாஜகவிடம் இருந்து அதிமுக விலகி நிற்க வேண்டும். வரும் காலங்களில் மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் தங்கள் குரலை உரக்க வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைய வேண்டும்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுகவுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணி. இந்த மணி சத்தத்துக்கும் அதிமுகவுக்கு விழிப்பு ஏற்படவில்லை என்றால் அதிமுக மீண்டும் எழுந்துக் கொள்ள வாய்ப்பில்லை.