சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி ஐ.பி.எஸ். நேற்று நள்ளிரவு சைக்கிளில் சென்று வடக்கு மண்டல பகுதிகளையும், காவல் நிலையங்களையும் ஆய்வு செய்தார். இரவு 2:45 மணிக்கு துவங்கி விடியற்காலை 4.30 மணி வரை வடக்கு மண்டல பகுதிகள் மற்றும் காவல் நிலையங்களை ஆய்வு செய்தார்.
நள்ளிரவில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமையாவின் மகள்தான் ரம்யாபாரதி. தூத்துக்குடியைச் சேர்ந்தவர். அம்மாவும் ஒய்வுபெற்ற அரசு அதிகாரி. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
அண்ணன் அருண் பிரசாத்தும் ரம்யாபாரதியும் இணைந்துதான் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து தேர்வு எழுதியிருக்கிறார்கள். ரம்யா ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். அண்ணன் ஐஆர்எஸ் அதிகாரியாக தேர்வாகியிருக்கிறார்.
ரம்யா பாரதியின் கணவர் ஸ்வருப் உதயகுமார் ஐஏஎஸ் அதிகாரி. கல்கத்தாவில் பணியாற்றுகிறார். காதல் திருமணம். குடிமைப் பணிகளுக்கான பயிற்சியின்போது காதல் மலர்ந்திருக்கிறது.
ரம்யா பாரதி பிறந்து வளர்ந்தது சென்னையில். படித்தது ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில்.
ஐபிஎஸ்க்கு தேர்வாகி 2008-ல் ஒசூரில் ஏஎஸ்பியாக முதல் பணி. ரம்யா பாரதியின் பலம் பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றுவது.
தமிழகத்தில் பணி புரிந்ததில் கோவை மாவட்டத்தில் எஸ்.பி.யாக பணிபுரிந்ததை மறக்க இயலாது என்கிறார் ரம்யா பாரதி.
”கோவையில் பணிபுரியும்போது கம்யூனிடி போலீஸ் என்ற சமூக காவலை ஏற்படுத்தினோம். கோவை மாவட்டத்துல வாழும் மலை வாழ் மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு கல்வியறிவுக்கு வசதி செய்துகொடுத்து அவர்கள் முன்னேற வழி செய்து கொடுத்தோம்” என்று பெருமையாக குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் சில வருடங்கள் பணி புரிந்துவிட்டு பிறகு வட மாநிலங்களில் இரண்டரை வருடங்கள் பணி புரிந்திருக்கிறார். டிஐஜி பதவி உயர்வு பெற்று தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். இப்போது வட சென்னைக்கு இணை ஆணையர்.
காவல் துறை என்பது பொதுமக்களுக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும் என்கிறார் ரம்யா பாரதி.
“கிரிமினல்களிடம்தான் நாம் போலீஸாக இருக்க வேண்டும். பொது மக்களிடம் நாம் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும், அதை நோக்கிதான் செயல்பட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்” என்கிறார் ரம்யா பாரதி.
இரவு 2 மணியிலிருந்து 5 மணி வரைதான் மக்கள் அயர்ந்து உறங்கும் நேரம். அப்போதுதான் குற்றங்களும் நடைபெறுகின்றன.
இந்த நேரத்தில் காவல் துறையினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க சைக்கிளில் சென்றேன்” என்கிறார் ரம்யா பாரதி ஐபிஎஸ். இவருடன் துணைக்கு ஒரு காவலர் மட்டுமே துணைக்கு சென்றிருக்கிறார்.
” வட சென்னையில் பல குற்றங்கள் தடுக்கப்பட்டது. ரவுடிகள் கொட்டம் அடக்கப்பட்டிருக்கிறது. போதைப் பொருள்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் கவனத்தைப் பெறவில்லை ஆனால் சைக்கிளில் ரோந்து சென்றது கவனத்தை ஈர்த்திருக்கிறது” என்று சிரிக்கிறார் இணை ஆணையர்.