இந்தியாவிலேயே முதல் முறையாக கமல்ஹாசன். இந்த வரியை நாம் அடிக்கடி கேட்டிருப்போம் பார்த்திருப்போம். தனது திரை வாழ்க்கையில் இந்தியாவிலேயே முதல் முறையாக பல முயற்சிகளை கமல்ஹாசன் எடுத்திருக்கிறார். அந்த முயற்சிகளுக்காகவே அவர் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறார்.
அது போல இந்தியாவிலேயே முதல் முறையாக கமல் மற்றொரு முயற்சியை விக்ரம் திரைப்படத்தில் மேற்கொண்டிருக்கிறார்.
விக்ரம் என்எஃப்டி (NFT) வெளியிடப்படும் என்று நேற்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
அது என்ன என்எஃப்டி?
NFTயை Non Fungible Token என்று சொல்லுவார்கள். கொஞ்சம் கஷ்டமான ஏரியாதான்.
எளிதில் புரியாத விஷயம்.
ஆனால் புரியாத விஷயங்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப்படுத்துவதுதானே கமல்ஹாசனின் திறமை
இந்த என்எஃப்டி க்ரிப்டோகரன்சி போன்றது. விக்ரம் திரைப்படத்தின் என்எஃப்டி வாங்கி வைத்துக் கொண்டால் அந்த திரைப்படம் தொடர்பான பல Virtual Digital விஷயங்களை அனுபவிக்க அனுமதி கிடைக்கும்.
இணைய வெளியில் உலாவ நமக்கென்று மும்பை, சென்னையில் வர்ச்சுவல் நிலங்களை விக்ரம் என்எஃப்டி மூலம் வாங்கிக் கொள்ள இயலும் என்றும் கமலின் அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த அறிக்கையில் தெளிவான விளக்கங்கள் இல்லையென்றாலும் காத்திருப்போம். கமல் விரைவில் விளக்கமளிப்பார் என்று நம்புவோம்.
யார் விக்ரம்?
இந்த நேரத்தில் விக்ரம் படத்தைப் பற்றிய மற்றொரு தகவலும் கசிந்து வருகிறது. விக்ரம் படத்தில் ‘கமல் விக்ரம் இல்லை’ என்பதே அந்த தகவல்.
இப்படத்தில் நகர்புறங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியாக வருகிறார் கமல், படத்தில் அவருடைய பெயர் அமர். அவரது விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவருகின்றன. தொடர் கொலைகளுக்கு பின்னால் பெரிய மாஃபியா கும்பல் இருப்பதை கண்டறிகிறார் அமர். பின்னர் அமருக்கும் மாஃபியா கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவரஸ்யமான மோதல்கள்தான் படத்தின் கதை.
கமல் அமராக நடிக்கும்போது விக்ரம் யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழும். அது திரைக்கதையில் பெரிய சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பகுதியில் விக்ரம் யார் என்று இயக்குநர் சொல்லப்போகிறாரா அல்லது முதல் பாகத்திலயே சொல்லப்போகிறாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.