இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் முடிசூடி இன்றுடன் (ஜூன் 2) 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1926-ம் ஆண்டில் பிறந்த இரண்டாம் எலிசபெத்தின் முழுப் பெயர் எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்ஸர். தனது 25-வது வயதில் 1953-ம் ஆண்டில் இங்கிலாந்தின் ராணியாக இவர் பதவியேற்றார். தற்போது இங்கிலாந்தை மிக அதிக ஆண்டுகாலம் ஆண்ட அரசி (இவருக்கு முன் குயீன் விக்டோரியா இந்தப் பெருமையைப் பெற்றிருந்தார்) என்ற புகழைப் பெற்றுள்ள ராணி எலிசபெத்தைப் பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
இங்கிலாந்தின் அரசியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, இரண்டாம் உலகப் போரில் இரண்டாம் எலிசபெத் பங்கேற்றுள்ளார். இப்போரின் ராணுவ டிரக்கின் ஓட்டுநராகவும், மெக்கானிக்காகவும் அவர் பணியாற்றியுள்ளார். இதன்மூலம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களிலேயே ராணுவத்தில் பணியாற்றிய முதல் பெண் என்ற பெருமையை ராணி எலிசபெத் பெற்றுள்ளார்.
2016-ம் ஆண்டுவரை 117 நாடுகளில் ராணி எலிசபெத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் அதிகபட்சமாக கனடாவுக்கு 22 முறையும், பிரான்ஸ் நாட்டுக்கு 13 முறையும் அவர் சென்றுள்ளார். இத்தனை நாடுகளுக்கு பயணம் செய்தபோதிலும் அவரிடம் பாஸ்போர்ட் இல்லை.
ராணி எலிசபெத்தின் கீழ் வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரெட் தாட்சர் உள்ளிட்ட 14 இங்கிலாந்து பிரதமர்கள் பணியாற்றி உள்ளனர்.
இங்கிலாந்தில் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் காரை ஓட்டுவதற்கு உரிமை பெற்ற ஒரே நபர் ராணி எலிசபெத் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அரச குடும்பத்திலேயே ராணி எலிசபெத்தின் பதவியேற்பு விழாதான் முதல் முறையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. 1953 ஜூன் 2ஆம் தேதி ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை 277 மில்லியன் பேர் தொலைக்காட்சியில் பார்த்தது ஒரு சாதனை.
ராணி எலிசபெத்தை காலையில் தூக்கத்தில் இருந்து எழுப்புவதற்காகவே பேக்பைப்பர் இசைக்கருவியை வாசிக்கும் ஒருவர் பக்கிங்காம் அரண்மனையில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினசரி காலை 9 மணிக்கு, ராணியின் படுக்கை அறையின் ஜன்னலுக்கு அருகில் நின்று பேக்பைப்பர் இசைக்கருவியை வாசித்து, இவர் ராணியை எழுப்புவார்.
இங்கிலாந்தைத் தவிர வேறு 14 நாடுகளின் ராணியாக எலிசபெத் உள்ளார்.
இமெயிலைப் பயன்படுத்திய முதல் அரசி எலிசபெத் ஆவார். இவர் 1976-ம் ஆண்டில் முதல் இமெயிலை அனுப்பியுள்ளார்.
ராணி எலிசபெத்துக்கு குதிரைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் வளர்த்த பல குதிரைகள், பந்தயங்களில் வென்றுள்ளன.
ராணி எலிசபெத்தின் உருவம் பொறித்த நாணயங்களை 35 நாடுகள் வெளியிட்டுள்ளன.