தனது முதல் படமான ‘ராக்கி’ மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் அடுத்த படமான ‘சாணி காயிதம்’. பழிக்குப் பழி வாங்கும் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் செல்வராகவன் கொடூர கொலைக்காரனாக நடித்திருப்பது ரசிகர்களை சீட் நுனிக்கு இட்டுச் செல்லும் என்கிறார் இயக்குநர் மாதேஸ்வரன்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். “நான் ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பைக் கண்டு வியந்தேன். அதன்பால், ‘சாணி காயிதம்’ படத்தில் நாயகி பாத்திரத்தில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அப்போதே இந்த படத்தில் அவரை நடிக்கவைக்க முடிவு செய்தேன். இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
அவரை இப்பாத்திரத்தில் நடிக்கவைத்தால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் அவர் எனது முதல் தேர்வாக இருந்தார்.
இக்கதாபாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்கிறார் மாதேஸ்வரன்.
இந்தப் படத்தின் இன்னொரு ஆச்சர்யம் செல்வராகவன். “செல்வா சார் பெரிய இயக்குநர். அவரை நடிக்க கூப்பிடுவதற்கு தயக்கமாகதான் இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்துக்கு அவர்தான் என்று மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. அதனால் அவரை நடிக்க அணுகினேன்”
“அவரைப் பிடிக்கிறது கஷ்டமாச்சே…எப்படி செல்வராகவனை நடிக்க வச்சிங்க?”
“சித்தார்த் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) செல்வா சாரின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரை அணுகுவது எளிதாக இருந்தது.
அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன், அவருக்கு கதை பிடிக்கவே உடனே ஒகே சொல்லிட்டார்.”
“அவர் ஒரு டைரக்டர். நீங்க டைரக்ட் பண்ணும்போது குறுக்குல வந்தாரா?”
” இல்லவே இல்லை. நான் அவரை ஒரு இயக்குனராகப் பார்த்தேன், அவர் அட்வைஸ் தருவாரா ? அல்லது எங்கள் பார்வைகள் வேறுபாட்டின் காரணமாக படைப்பு வேறுபாடுகள் இருக்குமா ? என்றெல்லாம் ஆரம்பத்தில் எனக்கும் தயக்கம் இருந்தது.
ஆனால் தன்னை வெறும் நடிகராகவும், என்னை இயக்குனராகவும் நினைத்து கொண்டு என்மீது முழுமையான நம்பிக்கை வைத்து அவர் நடித்தார்.
பிரச்சினை இல்லாம முடிந்தது” என்கிறார் மாதேஸ்வரன்.
”அதென்ன படத்தின் பெயர் சாணி காயிதம்?”
“படத்தைப் பாருங்க. உங்களுக்கே புரியும். இப்ப நான் சொன்னா நல்லாருக்காது” என்று சிரிக்கிறார் இயக்குநர்.
மே-6 அன்று பிரைம் வீடியோவில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சாணி காயிதம் வெளியாகவுள்ளது.