சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை 2022 ஐபிஎல் தொடரில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறி விட்டது. இனி நடக்கவுள்ள அனைத்து போட்டிகளிலும் ஜெயித்தாலும் இந்த ஐபிஎல்லின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறுவது கஷ்டம்தான். இந்த சூழலில் இனியும் இந்த தொடரைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த தொடருக்குள் அணியை வலுப்படுத்துவதில் அணி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அப்படி அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இனி என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:
பயிற்சியாளர் தோனி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பே தோனிதான். சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும், கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியதுடன், 4 கோப்பைகளையும் வென்ற பெருமை தோனிக்கு உள்ளது. அதேநேரத்தில் அவருக்கு வயதாகிவிட்டதையும் கவனிக்க வேண்டும். சத்யராஜ் நடித்த ‘அடிதடி’ படத்தில் ‘நீ யூத் இல்லை. யூத் மாதிரி’ என்று ஒரு டயலாக் வரும். அதுபோல்தான் தோனியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தோனி 40 வயதைக் கடந்துள்ள நிலையில் இனியும் ஒரு கேப்டனாகவோ, வீரராகவோ அவரை வைத்திருக்காமல் அணிக்கு வீரர்களுக்கு வழிகாட்டும் ‘மெண்டார்’ ஆகவோ அல்லது பயிற்சியாளராகவோ அவரை நியமிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அணிக்கு புது ரத்தத்தைப் பாய்ச்சலாம்.
தேவை புதிய கேப்டன்:
சிஎஸ்கேவுக்காக தோனி ஆடாத பட்சத்தில், அவருக்கு பதில் அணிக்கு தலைமை தாங்கப் போவது யார்? என்பது அடுத்த கேள்வி. கேப்டன் பதவியில் தன்னால் சரியாக செயல்பட முடியாது என்பதை ஏற்கெனவே ஜடேஜா சொல்லிவிட்டார். இந்தச் சூழலில், அடுத்த கேப்டனாக ஜொலிக்கும் அளவுக்கு தற்போது யாரும் அணியில் இல்லை. இந்தச் சூழலில் அடுத்த ஏலத்தின்போது கேப்டன் பதவிக்கு பொருத்தமான ஒரு நபரை வாங்க வேண்டியது அவசியம்.
ஏற்கனவே முன்னணி இந்திய வீரர்கள் பலரும் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டுள்ளதால் கேப்டன் பதவிக்கு ஏற்ற உள்ளூர் வீரர்கள் யாரும் அடுத்த ஆண்டில் ஏலத்துக்கு வரமாட்டார்கள். இந்தச் சூழலில் கேப்டன் பதவிக்கு ஏற்ற சிறந்த வெளிநாட்டு வீரர்கள் யாரையாவது சிஎஸ்கே வாங்கவேண்டும். அந்த வகையில் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், இயான் மோர்கன், ஜோ ரூட், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன், தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமா ஆகியோரில் யாரையாவது வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சி செய்ய வேண்டும்.
முதுமைக்கு விடை கொடுப்போம்:
பிராவோ, ராயுடு, உத்தப்பா போன்ற வீரர்கள் சென்னை அணியின் வெற்றிகளுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இப்போது அவர்களுக்கு வயதாகிவிட்டது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல கேட்ச்களை விட்டதற்கு வீரர்களின் வயதும் ஒரு காரணம். எனவே இனியும் தயங்காமல் மூத்த வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும். அதற்கு பதிலாக இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும்.
இதுபோன்ற மாற்றங்களைச் செய்தால் நிச்சயமாக அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீறுகொண்டு எழும். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் தோற்றுப்போன சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்தா ஐபிஎல்லிலேயே மீண்டு வந்து கோப்பையை வென்றது.
அதுபோல் அடுத்த ஆண்டில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் எழுச்சி பெறும் என்று எதிர்பார்ப்போம்.