மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஜிகா என்றால் என்ன? எவ்வாறு பரவுகிறது? இந்த நோயின் அறிகுறிகள் தான் என்ன?
மகாராஷ்டிராவில் பரவும் ஜிகா வைரஸ்
மத்திய சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக நேற்று (3-7-24) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் துறை இயக்குநர் அதுல் கோயல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜிகா வைரஸ் கர்ப்பிணியை பாதித்தால், வயிற்றில் இருக்கும் சிசுவும் பாதிக்கப்படும் என்பதால் மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அல்லது அதற்கு அருகில் உள்ள இடங்களில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி, கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸுக்கான பரிசோதனை செய்ய வேண்டும், இதில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு கரு வளர்ச்சியை கண்காணிக்கவும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் ஏடிஸ் கொசுக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, இதற்கென தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஜிகா என்றால் என்ன? எவ்வாறு பரவுகிறது? இந்த நோயின் அறிகுறிகள்தான் என்ன? பொது நல மருத்துவர் ஏ.பி. ஃபரூக் அப்துல்லா தரும் விளக்கம் இங்கே…
ஜிகா என்றால் என்ன? எவ்வாறு பரவுகிறது?
ஜிகா என்பது ஒரு வகை கிருமி (வைரஸ்) ஆகும். இது டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சப்பானிய மூளைக் காய்ச்சல் போன்றவற்றை உண்டாக்கும் ஃப்ளாவி வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. எனவே, மேற்சொன்ன வைரஸ்களுக்கு மரபணு ஒற்றுமை உண்டு.
இந்த வைரஸ் பரவுவதற்கு வாகனமாக செயல்படுவது ‘ஏடிஸ் கொசு’. டெங்கு வைரஸைப் பரவச் செய்வதும் இதே ஏடிஸ் கொசு தான். இவ்வாறு நோய் பரவுவதற்கு பூச்சியினம் துணையாக இருக்கும் நோய்களை Vector Borne Diseases என்று அழைக்கிறோம்
வைரஸ் தொற்றுக்கு உள்ளான கொசு மனிதனை கடிக்கும் போது கொசுவிடம் இருந்து மனிதனுக்குப் பரவுகிறது. கிருமித் தொற்றுக்குள்ளான மனிதனை ஏடிஸ் கொசு கடித்துவிட்டு ஆரோக்கியமான மனிதர்களைக் கடிக்கும் போது பிற மனிதர்களுக்கும் பரவுகிறது.
நோய்த் தொற்றுக்குள்ளான மனிதனோ மனிதியோ பாதுகாப்பற்ற முறையில் மற்றொருவருடன் கலவியில் ஈடுபடும் போதும் பரவும்.
நோய்த் தொற்றுக்குள்ளான நபரிடம் இருந்து கிருமியானது ரத்தத்தில் தங்கியிருக்கும் நாட்களில் ரத்தம் கொடையாகப் பெறப்பட்டு பிறருக்கு செலுத்தப்பட்டால் அதன் வழி பரவும்.
நோய்த் தொற்றுக்குள்ளான தாயிடம் இருந்து கர்ப்பப்பைக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் சிசுவுக்கு கர்ப்ப காலத்திலோ அல்லது பிரசவத்தின் போதோ பரவும் வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரம் நோய் தொற்று உடையவரை தொடுவதாலோ அவருக்கு பணிவிடை செய்வதாலோ இந்த நோய் பரவுவதில்லை.
ஜிகா வைரஸ் உண்டாக்கும் மரண விகிதங்கள் என்ன?
ஜிகா வைரஸ் தாக்குண்டவர்களில் 5இல் ஒருவருக்கு மட்டுமே அறிகுறிகள் தோன்றும். ஏனைய நால்வர் அறிகுறிகள் ஏதுமின்றியே குணமடைந்து விடுவார்கள்.
இந்த நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் மிக மிக அரிதானது. டெங்குவுடன் இந்த நோயை ஒப்பிட்டால் மனிதர்களைக் கொல்வதில் அல்லது உயிர்களை அச்சுறுத்துவதில் டெங்குவுக்கு அருகில் கூட இந்த நோயால் வர முடியாது. ஆனாலும் ஏன் இந்த நோயை இத்தனை பெரிதாகப்பேசுகிறோம் என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது
இந்த நோய் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்பட்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இதை “ஜிகா உண்டாக்கும் பிறவி அங்கக் குறைபாடுகள்”( CONGENITAL ZIKA SYNDROME) என்று அழைக்கிறோம்.
கர்ப்ப காலத்தில் இந்த நோய் தொற்று ஏற்பட்டால் கருவில் இருக்கும் சிசுவுக்கு கபாள மண்டை ஓடு வளர்ச்சியில் மிகவும் சுருங்கி விடும். இதை MICRO CEPHALUS என்று அழைக்கிறோம்.
மண்டை ஓட்டின் மொத்த கொள்ளளவு குறைவதால் மூளையின் அளவும் குறைந்து விடும்.
மேலும், கண் பார்வையில்/ வளர்ச்சியில் பிறவிக்கோளாறு ஏற்படும்; கால் பாதம் வளர்ச்சியில் கோளாறு ஏற்படும். குழந்தையின் மொத்த தசைகளும் இறுக்கத்துடன் இருக்கும். ஏனைய குழந்தைகள் போல வளர்ச்சியை இந்த குழந்தைகள் பெற முடியாமல் போகும்.
இத்தகைய ஆபத்தான நிலையை நமது அடுத்த சந்ததிக்கு உருவாக்கும் சாத்தியம் இந்த நோய்க்கு இருப்பதால் மட்டுமே இந்த நோய் இத்தகைய அச்சுறுத்தல் நிலையை அடைந்துள்ளது.
ஆயினும் அரிதினும் அரிதாக இந்த நோய் தாக்குண்ட மக்களுள் ‘குல்லியன் பாரி சிண்ட்ரோம்’ எனும் நரம்பு மண்டலத்தை தாக்கும் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது அரிதினும் அரிதான நிகழ்வு மட்டுமே. எனவே வீண் பீதி தேவையற்றது.
இந்த ஜிகா வைரஸுக்கு எதிராக நமது உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தி நமது நரம்பு மண்டலத்தை தாக்குவதால் தசைகள் செயலழிந்து வாதம் ஏற்படும்.
ஜிகா வைரஸ் நோயின் அறிகுறிகள் என்ன?
கடும் ஜூரம், உடல் வலி, உடல் சோர்வு, மேனியில் சிவப்புப் புள்ளிகள் / படை போன்று தோன்றுவது, மூட்டு வலி, கண்கள் சிவந்து போவது போன்ற அறிகுறிகள் இருக்கும். டெங்கு காய்ச்சலுக்கும் இதே அறிகுறிகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள் தோன்றுமாயின் உடனே பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். ரத்தம்/ கருப்பை நீர் / விந்து நீர் / சிறுநீர் போன்றவற்றில் இந்த வைரஸ் காணப்படும். எனவே, இந்த திரவங்களில் வைரஸின் இருப்பை அறிந்துகொள்ள முடியும்.
ஜிகா வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி?
டெங்கு பரவாமல் தடுக்க எடுக்கும் அத்தனை யுக்திகளும் இந்த நோய் பரவாமலும் தடுக்கும்.
ஏடிஸ் கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு வளரக்கூடியவை. தான் உருவான இடத்தில் இருந்து 400 மீட்டர் வரை பறந்து சென்று நோயைப் பரப்பவல்லவை. பகல் நேரத்தில் கடிக்கும் தன்மை கொண்டவை. எனவே, நம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியேவும் மழை நீர் லேசாக தேங்கி நிற்கக்கூடிய சிரட்டைகள், டயர்கள், காலி டம்ளர்கள், உபயோகத்தில் இல்லாத அம்மி ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காதவாறு அப்புறப்படுத்த வேண்டும்.
தண்ணீர் நமது தேவைக்குப் பிடித்து வைக்க வேண்டும் என்றால் அவற்றை முறையாக மூடி வைக்க வேண்டும். மூடி வைக்காத நீரில் ஏடிஸ் கொசு வளரும்.
வீட்டுக்குள் பழைய மாடல் குளிர்சாதனப் பெட்டிகளில் கீழே தேங்கும் நீரிலும், அறை குளிர்விக்கும் ஏசிகளில் இருந்து வெளியேறும் நீர் வாளியில் சேர்ந்து கொண்டிருந்தால் அதிலும்கூட ஏடிஸ் கொசு முட்டையிட்டு வளரும். ஏடிஸ் கொசு முட்டையிட்டு வளர 10 மில்லி நீர் தேங்கியிருந்தால் கூட போதும். எனவே, நமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொண்டு நன்னீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால் நிச்சயம் நமது பகுதிகளில் ஜிகா பரவாது.
குழந்தைகளுக்கு மணிக்கட்டு வரை மறைக்கும் முழுக்கை சட்டைகள், பேண்ட்கள் அணிவிக்க வேண்டும்.
கொசுக்கள் பரவும் இந்த பருவ காலத்தில் குழந்தைகளும் சரி நாமும் சரி கொசு வலைக்குள் உறங்குவது நல்லது.
கொசுவை முடிந்த அளவு நம்மை கடிக்காமல் பார்த்துக்கொள்வது தான் சிறந்த நோய் தடுக்கும் யுக்தியாகும். இதற்காக கைகளில் முகத்தில் கொசுக்களை அண்டவிடாமல் செய்யும் களிம்புகளை பூசலாம். வீடுகளில் கொசுக் கொல்லி மருந்தை ஆவியாக்கும் கருவியை பயன்படுத்தலாம்.
ஒரு பகுதியில் ஜிகா பரவுகிறது என்று தெரிந்தால் அந்த பகுதிக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பமாகக் காத்திருக்கும் பெண்கள்/ ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அந்த பகுதிகளுக்குச் சென்று வந்திருந்தால் கர்ப்பமாகக் காத்திருக்கும் ஆண் அடுத்த ஆறு மாதங்களுக்கும் மற்றும் பெண் அடுத்த இரு மாதங்களுக்கும் கர்ப்பமாவதைத் தவிர்க்க வேண்டும். கலவியின் போது ஆணுறை / பெண்ணுறை பயன்படுத்தலாம். அந்த பகுதியில் வாழும் கர்ப்பிணிகள் சிசுவின் வளர்ச்சியை அறியும் ஸ்கேன் பரிசோதனைகளை செய்து வரலாம்.
தொற்று கண்டவர் செய்ய வேண்டியது என்ன?
காய்ச்சல் அறிகுறி தோன்றினால் மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருந்தகங்களிலோ அல்லது சுய மருத்துவமோ செய்யக் கூடாது. கட்டாயம் தேவையற்ற ஊசிகள் காய்ச்சலுக்குப் போடக்கூடாது. பாராசிட்டமால் மாத்திரையை தவிர வேறு மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி பயன்படுத்துதல் கூடாது. ஆஸ்பிரின்/ டைக்லோபினாக் போன்ற வலி நிவாரணிகளை இந்த காய்ச்சலுக்கு பயன்படுத்தக்கூடாது.
நன்றாக நீர் அருந்த வேண்டும்.
பெரும்பாலும் சாதாரண ஜூரமாக குணமாகும் நோய் ஆதலால் உயிர்ப்பயம் தேவையற்றது. அதேநேரம், தொற்று கண்டவர் பெண்ணாக இருப்பின் தான் கர்ப்பமடைவதை தொற்றில் இருந்து குணமானதில் இருந்து இரண்டு மாதம் தள்ளிப்போட வேண்டும். இதற்கான காரணம் – பெண்ணின் ஜனனக் குழாய் நீர் மற்றும் திரவத்தில் ஜிகா வைரஸ் அதிகபட்சம் இரண்டு மாதங்கள் உயிர்ப்புடன் இருக்கும் என்று அறியப்பட்டுள்ளது.
தொற்று கண்டவர் ஆணாக இருப்பின் குழந்தைப் பேறுக்கு முயற்சி செய்வதை ஆறு மாத காலம் வரை தள்ளிப்போட வேண்டும். இதற்குக் காரணம் ஆணின் விந்துப்பையிலும் விந்தணுக்களிலும் சுமார் ஆறு மாதங்கள் வரை ஜிகா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தொற்று கண்டவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்ததில் இருந்து இரண்டு வாரங்கள் வரை ரத்தம் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டால் அவருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து சிசு வளர்ச்சியை அறியும் ஸ்கேன் செய்யப்பட்டு சிசுவிடம் வளர்ச்சிக் குறைபாடுகள் தோன்றுகின்றனவா என்பதை அறிந்திட வேண்டும்.
ஜிகாவுக்கு தடுப்பூசி இருக்கிறதா?
இன்னும் இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டறியப்படவில்லை ஆயினும் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வுப்பணி நடந்து வருகிறது. கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பாக செலுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டறியப்பட உள்ளன.