குட் நெய்பர்ஸ் (Good Neighbours) – அமேசான் ப்ரைம்
உங்களுக்கு சஸ்பென்ஸ் திரில்லர் பிடிக்குமா? பிடிக்கும் என்றால் உங்களுக்கு இந்தப் படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிக அறிமுகமில்லாத பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவர் மதுபான விடுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு பெண்ணை சந்திக்கிறார்கள். மதுபான விடுதியிலிருந்து திரும்பும்போது அவர்கள் ஓட்டிச் செல்லும் கார் அந்தப் பெண் மீது மோதி கொன்றுவிடுகிறது.
அந்தப் பெண்ணின் சகோதரி யார் விபத்தை ஏற்படுத்தியவர்கள் என்று விசாரிக்கத் துவங்குகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை. சில இடங்களில் கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் வேகமாக நகரும் திரைப்படம்.
பிரம்மாஸ்திரம் – இந்தி (டிஸ்னி ஹாட்ஸ்டார்)
பாலிவுட்டில் இந்த ஆண்டு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பிய படம் பிரம்மாஸ்திரம். நிஜ வாழ்க்கை தம்பதிகளான ரன்பீர் கபூர் – ஆலியா பட் இடையே நெருக்கம் அதிகமானதற்கு காரணமான படம் இது என்பதும் இதற்கு முக்கிய காரணம். கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் தீபாவளியை முன்னிட்டு 23-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
பிரம்மாஸ்திரம் என்ற சக்தி வாய்ந்த அஸ்திரத்தை ஒரு கும்பல் கைப்பற்ற முயற்சிக்கிறது. அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் ரன்பீர். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடியுடன் அமிதாப் பச்சன், ஷாரூக் கான் , நாகார்ஜுனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கிராபிக்ஸ் சண்டைக் காட்சிகள் ஸ்டார்வார்ஸ், ஹாரிபாட்டர் உள்ளிட்ட படங்களை நினைவூட்டுவதால், குழந்தைகளை இப்படம் நிச்சயம் கவரும்.
பேட்டைக் காளி – தமிழ் (ஆஹா)
ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘பேட்டைக் காளி’ வெப் தொடர் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தத் தொடரை இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். கலையரசன், ஷீலா ராஜ்குமார், ஆடுகளம் கிஷோர், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். லா.ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
“ஆதிகாலத்தில் மனிதர்கள், காளைகளை அடக்கினர். இப்போதும் நம் கலாச்சார விளையாட்டாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில்தான் நடக்கிறது. நம் கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில், இதுவரை சொல்லப்படாத கதைகளை ஆராயவும் இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளோம்” என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார்.
பபூன் – தமிழ் (நெட்பிளிக்ஸ்)
கூத்துக் கட்டும் தொழில் செய்யும் குடும்பம் வைபவ்வுடையது. இத்தொழிலில் வருமானம் இல்லாத நிலையில் தனது நண்பர் இளையராஜாவுடன் சேர்ந்து வெளிநாடு செல்லத் திட்டமிடுகிறார் வைபவ். இதற்காக பணம் சேர்க்க லாரி ஓட்டுகிறார்.
இந்த சூழலில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
போதைப் பொருள் கடத்தல், அதற்குப்பின்னுள்ள அரசியல் , தலைவர்களின் ஈகோ, இலங்கை அகதிகளின் நிலை என பல்வேறு விஷயங்களைப் படத்தில் பேசியுள்ளார் இயக்குநர் அசோக் வீரப்பன். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இப்படம் வெளியாகி உள்ளது. ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இப்படம் இருக்கும்.
பல்து ஜான்வர் – மலையாளம் (டிஸ்னி ஹாட்ஸ்டார்)
அனிமேஷன் துறையில் ஈடுபட்டு நஷ்டமடைந்த இளைஞரான பிரசூன், அதனால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் லைவ்ஸ்டாக் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்கிறார். நகரத்தில் வளர்ந்த அவருக்கு ஆரம்பத்தில் கிராமத்தில் வேலை பார்க்க பிடிக்கைவில்லை. அதேபோல் வேலையும். பின்னர் காலப்போக்கில் அதற்கு இணங்கிவரும் நிலையில் இவர் தவறான மருந்தைக் கொடுத்ததால் போலீஸ் நாய் ஒன்று இறந்துவிடுகிறது. இதனால் ஊரைவிட்டே கிளம்பலாம் என்று நினைக்கும்போது, சிக்கலான பிரசவத்தில் இருந்து ஒரு மாட்டை காப்பாற்றி ஊர் மக்களின் ஹீரோவாகிறார்.
பெரிய அளவில் எந்த ட்விஸ்டும் இல்லாமல் நீரோடையைப் போல் செல்கிறது படம். ‘மின்னல் முரளி’ என்ற ஆக்ஷன் படத்தை இயக்கிய பசில் ஜோசப்தான் நாயகன். ஆனால் இங்கு ஆக்ஷனுக்கு துளியும் இடமில்லை. கிராமத்து மக்களின் வெள்ளந்தியான குணத்தை எடுத்துக்காட்டும் இந்த படம் பீல்குட் மூவியாக உள்ளது. ஹாட்ஸ்டாரில் இதை தமிழிலும் பார்க்கலாம்.
பிம்பிசாரா – தெலுங்கு (ஜீ 5)
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு சரித்திர கதைகளை மையமாக வைத்து திரைப்படங்களை எடுக்கும் வழக்கம் தெலுங்கு படவுலகில் அதிகரித்து வருகிறது. அப்படி எடுக்கப்பட்டு கடந்த மாதம் தியேட்டர்களில் ரிலீஸான படம்தான் பிம்பிசாரா.
500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசரான பிம்பிசாரர், ஒரு பணியை முடிப்பதற்காக டைம் டிராவல் செய்து நவீன உலகுக்கு வருகிறார். பழங்கால மனிதரான அவர், புதிய தொழில்நுட்பங்களைக் கற்று தான் செய்யவந்த பணியை வெற்றிகரமாக செய்து முடித்தாரா என்பதுதான் படத்தின் கதை.
நந்தமுரி கல்யாண் ராம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சம்யுத்தா மேனன், கேத்தரின் தெரசா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.