உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் 20-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகள் பற்றி ஒரு பார்வை.
பிரேசில்:
கால்பந்து உலகக் கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற பெருமை பிரேசில் அணிக்கு இருக்கிறது. அதேபோல் இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை போட்டிகளுக்கும் தகுதிபெற்ற ஒரே அணி என்ற பெருமையும் பிரேசிலுடையதுதான்.
1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணி, அடுத்த உலகக் கோப்பை வெற்றிக்காக தற்போது 20 ஆண்டுகள் காத்திருக்கிறது. அந்த காத்திருப்பை இந்த உலகக் கோப்பையுடன் நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆவேசத்துடன் வந்திருக்கிறது பிரேசில் அணி.
நெய்மரை மையப்படுத்தி உள்ள பிரேசிலின் தாக்குதல் பிரிவில் காப்ரியல் ஜீசஸ், ராபின்ஹா, ஆண்டனி உள்ளிட்ட பல முன்கள வீரர்கள் உள்ளனர். இதனால் ஒருவரை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் பிரேசில் அணி இல்லை. உலகக் கோப்பைக்கு இணையாக கருதப்படும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்றிருப்பதும் அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ஐரோப்பிய அணிகளை எதிர்த்து எந்த போட்டியிலும் ஆடாமல் இருப்பது பிரேசில் அணியின் பலவீனம். அதனால் ஐரோப்பிய அணிகளை பிரேசில் எப்படி கையாள்கிறது என்பதைப் பொறுத்து உலகக் கோப்பையில் அந்த அணியின் வெற்றி இருக்கும்.
அர்ஜென்டினா:
மரடோனா காலத்துக்கு பிறகு இந்திய கால்பந்து ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான அணியாக அர்ஜென்டினா இருக்கிறது. அதிலும் மெஸ்ஸி தலையெடுத்த பிறகு அந்த நெருக்கம் ஒரு காதலாகவே மாறி இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் கடைசி முறையாக ஆடும் அவருக்காகவே இந்த முறை அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். சமீபத்தில் நடந்த சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து 35 போட்டிகளில் அர்ஜென்டினா தோற்காமல் இருப்பது அந்த அணியின் பலத்தைக் காட்டுகிறது.
மெஸ்ஸியை மட்டுமே நம்பியிருந்த காலம் போய், ஏஞ்சல் டி மரியா, ஜியோவனி லோ செல்சோ, லடாரோ மார்டினஸ், டிபாலா ( என பல முன்கள அம்புகளை தன்னிடம் வைத்துள்ளது அர்ஜென்டினா.
ஏஞ்சல் டி மரியா மற்றும் டிபாலா ஆகிய முக்கிய வீரர்கள் காயம் அடைந்திருப்பது அந்த அணியின் பலவீனம். முக்கிய போட்டிகள் தொடங்குவதற்கு முன் அவர்கள் காயத்தில் இருந்து மீண்டுவர வேண்டுமே என்று டென்ஷனுடன் காத்திருக்கிறது அர்ஜென்டினா அணி.
பிரான்ஸ்:
1958 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து உலகக் கோப்பையை வென்று சாதனை படத்தது பீலேவின் பிரேசில் அணி. அதற்கு பின்பு எந்த அணியாலும் அந்த கோப்பையை அடுத்தடுத்து 2 முறை வெல்ல முடியவில்லை. அந்த சாதனையை இப்போது படைக்கும் ஆசையுடன் கத்தாருக்கு சென்றிருக்கிறது பிரான்ஸ் அணி.
இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகளில் ஒன்றில்கூட தோற்காமல் முன்னேறியது அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. கரிம் பென்சீமா, கிலியன் எம்பாப்பே, ஆண்டனி கிரியஸ்மேன், ஆகிய 3 முன்கள வீரர்களும் சிறந்த பார்மில் இருப்பது அந்த அணிக்கு பிளஸ். அதிலும் மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு இணையான வேகம் கொண்ட எம்பாப்பே அணியில் இருப்பது மிகப்பெரிய பலம்.
அதேநேரத்தில் முன்னணி வீரர்களான பால் போக்பா, கோலோ காண்டே ஆகியோர் காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடாமல் இருப்பது பிரான்ஸ் அணியின் பலவீனம்.
இங்கிலாந்து:
சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து, இப்போது கால்பந்திலும் தங்கள் கொடியைப் பறக்கவிட கத்தார் உலகக் கோப்பைக்கு வந்துள்ளது. கால்பந்து கடவுளாக கருதப்படும் மெஸ்ஸியே, உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்று என இங்கிலாந்தை சொல்லியுள்ளார். இதிலிருந்தே அந்த அணியின் ஆற்றலைத் தெரிந்துகொள்ளலாம்.
தகுதிச் சுற்று போட்டிகளில் தோல்வியே சந்திக்காத அணியான இங்கிலாந்து, இப்போட்டிகளில் மொத்தம் 39 கோல்களை அடித்துள்ளது. இதன்மூலம் தகுதிச் சுற்று போட்டிகளில் அதிக கோல்களை அடித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
ஹாரி கேன், புகாயோ சாகா, பில் போடென், மாசோன் அவுண்ட் ( Harry Kane, Bukayo Saka, Phil Foden, Mason Mount) என ஆற்றல்மிக்க பல வீரர்கள் இருப்பது அந்த அணியின் பலம்.