கத்தார் நாட்டில் நவம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பல புதிய விஷயங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்…
5 மாற்று வீரர்கள்
சுறுசுறுப்பான ஆட்டம் கால்பந்து. போட்டி தொடங்கியது முதல் கடைசி விசில் சத்தம் கேட்கும்வரை வீரர்கள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். இப்படி ஓடிக்கொண்டே இருப்பதாலும், போட்டிக்கு நடுவில் காயம் ஏற்படுவதாலும் போட்டிக்கு நடுவே ஒவ்வொரு அணியும் சில வீரர்களை மாற்றவேண்டி இருக்கும். ரஷ்யாவில் கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஒவ்வொரு அணியும் போட்டியின்போது 3 மாற்று வீரர்களை (சப்ஸ்டிடியூட்) மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக ஒவ்வொரு அணியும் 5 மாற்று வீரர்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது. இதன்மூலம் சோர்வடையும் வீரர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு போட்டி உற்சாகமாக நடக்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஆஃப்சைட் தொழில்நுட்பம்:
கிரிக்கெட்டில் ஒரு வீரர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனாரா இல்லையா என்பதை தொழில்நுட்பம் மூலம் அறிந்துகொள்ளும் வசதி இப்போது இருக்கிறது. இதேபோல் கால்பந்தில் ஒரு வீரர் ஆஃப்சைடில் வந்து பந்தை அடித்தாரா என்பதை தெரிந்துகொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை இந்த உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தப் போகிறார்கள். இதன்மூலம் ஆஃப்சைட் வழங்குவதில் உள்ள குழப்பங்கள் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக a limb-tracking camera க்கள் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக தலா 8 கேமராக்கள் ஒவ்வொரு மைதானத்திலும் பொருத்தப்பட உள்ளன.
குளிர்காலத்தில் உலகக் கோப்பை
பொதுவாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோடைகாலத்தில்தான் நடக்கும். இப்போட்டியில் ஆடும் பெரும்பாலான நாடுகளும், போட்டி நடக்கும் நாடுகளும் குளிர்ந்த சூழலைக் கொண்ட நாடுகளாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை இருந்துவந்தது. ஆனால் வெப்ப நாடான கத்தாரில் கோடைகாலத்தில் 50 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் காய்ச்சி எடுக்கும் என்பதால் முதல் முறையாக குளிர்காலத்துக்கு உலகக் கோப்பை கால்பந்து போட்டி மாற்றப்பட்டுள்ளது.
அணி வீரர்களின் எண்ணிக்கை
உலகக் கோப்பை போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகள் அதிகபட்சமாக 23 வீரர்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்பது பழைய உலகக் கோப்பை போட்டிகளின் விதி. ஆனால் கொரோனாவின் தாக்கத்தாலும், போட்டியின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காகவும் ஒவ்வொரு அணியும் 26 வீரர்களை வைத்திருக்கலாம் என்ற புதிய நடைமுறை இந்த உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் நடுவர்கள்:
ஒவ்வொரு துறையிலும் பெண்களின் முன்னேற்றம் தவிர்க்க முடியாததாக உள்ளது. கால்பந்து விளையாட்டுக்கும் இது பொருந்தும். ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், முதல் முறையாக 3 பெண் நடுவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டிபானி ஃபிராபர்ட், ஜப்பானைச் சேர்ந்த யோஷிமி யமசிடா, ரவாண்டாவைச் சேர்ந்த சலீமா முகன்சங்கா ஆகியோருக்குதான் உலகக் கோப்பை போட்டிகளில் நடுவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறைந்த மைதானங்கள்:
பெரும்பாலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பல்வேறு நகரங்களில், 10-க்கும் மேற்பட்ட மைதானங்களில் நடக்கும். ஆனால் இந்த உலகக் கோப்பையில் மிகக் குறைந்த அளவாக 8 மைதானங்களில் போட்டி நடைபெற உள்ளது. அந்த 8 மைதானங்களும்கூட 50 கிலோமீட்டர் தூர சுற்றளவுக்குள் இருப்பதால் ரசிகர்களுக்கு அதிக அலைச்சல் இல்லாத உலகக் கோப்பை கால்பந்து போட்டியாக இது இருக்கும்.