டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை பல ஆட்டங்களில் வீரர்களைவிட மழைதான் சிறப்பாக ஆடியிருக்கிறது. இங்கிலாந்து அணி அரை இறுதிவரை வந்ததற்கும், பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே காணாமல் போனதற்கும் மழையும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
இப்படி இந்த தொடர் முழுக்க கிரிக்கெட்டுக்கு ஆட்டம் காட்டிய மழை, இறுதிப் போட்டியிலும் வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பார்படாஸில் 29-ம் தேதி (சனிக்கிழமை) இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில், அன்றைய தினம் மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரிசர்வ் நாளிலும் மழைக்கு வாய்ப்பு
இந்த உலகக் கோப்பை தொடரின் அட்டவணையைப் பொறுத்தவரை இறுதிப் போட்டியன்று மழை பெய்தால், அதற்கு அடுத்த நாளான 30-ம் தேதி போட்டியை நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிசர்வ் டேவாக இருக்கும் அன்றைய தினமும் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி நடந்து ஆட்டம் தடைபட்டால் டி20 உலகக் கோப்பை, இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டும். அதை இரு அணிகளும் விரும்பவில்லை. போட்டி முழுமையாக நடந்து, தங்கள் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இரு அணி வீர்ர்களின் ஆசையாக உள்ளது.
துபேவுக்கு பதில் ஜெய்ஸ்வால்:
ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் ஷிவம் துபேவை உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்த்தனர். ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் எதிர்பார்த்த்துபோல் துடிப்பாக ஆடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில்கூட அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
அதனால் துபேவை அணியில் இருந்து நீக்கி, அவருக்கு பதில் ஜெய்ஸ்வாலை அணியில் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஜெய்ஸ்வால் அணிக்கு வரும் பட்சத்தில் அவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார். தொடக்க ஆட்டக்காரராக ஆடும் விராட் கோலி 3-வது பேட்ஸ்மேனாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிக்கு கடைசி போட்டி?
இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே, இந்திய அணியில் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடம் அளிக்க வேண்டுமா என்ற கேள்வி நிலவியது. இருவருக்கும் வயதாகிவிட்ட்தால் டெஸ்ட் போட்டியில் மட்டும் அவர்களை சேர்த்தால் போதும் என்று தேர்வுக் குழுவில் சிலர் கருதினர். ஆனால் மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த தொடரில் ஆட இரு வீர்ர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த இரு வீர்ர்களில் ரோஹித் சர்மா, கடந்த 2 போட்டிகளாக சிறப்பாக ஆடுகிறார்.
ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் கோலி சிறப்பாக ஆடவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே அவர் ஓரளவு ஆடினார். மற்ற போட்டிகளில் அவர் பெரும்பாலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார். அதனால் டி20 போட்டிகளுக்கு விராட் கோலியை இனி தேர்வுக்குழு பரிசீலிப்பது சந்தேகம். எனவே இந்த போட்டி டி20-யில் விராட் கோலியின் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பையுடன் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது ரசிகர்களின் கனவாக உள்ளது.