கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. ஆண்டுக்கு 250 படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதில் 10 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல நுாறு கோடி இழப்பை சந்திக்கிறது தமிழ் சினிமா. 2025ம் ஆண்டை பொறுத்தவரையில் மதகஜராஜா, குடும்பஸ்தன் என 2 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. பக்கத்து மாநிலமான கேரளாவிலும் இதே நிலை. அங்கேயும் தயாரிப்பாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட, நடிகர்கள் சம்பளம் அதிகரிப்பு, தயாரிப்பு செலவு அதிகரிப்பு, எதிர்பார்த்த பிஸினஸ் இல்லை போன்ற காரணங்களை கூறி, வரும் ஜூன் மாதம் முதல் படத்தயாரிப்பை நிறுத்த மலையாள சினிமா முடிவு செய்துள்ளது.
மலையாள திரையுலகம் எடுத்த முடிவு, தமிழ்த்திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில கேள்விகளை கேட்க வைத்துள்ளது. அவர்கள் பாணியில் நாமும் சிறிது காலம் படத்தயாரிப்பை நிறுத்தி வைத்தால் என்ன என்று பல தயாரிப்பாளர்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள். தமிழ் சினிமாவிலும் ஸ்டிரைக் வருமா? அப்படி வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்குமா என்று மூத்த சினிமாகாரர்களிடம் கேட்டோம்
‘‘மலையாள சினிமாவுக்கு முன்பே தமிழ்சினிமாகாரர்கள்தான் ஸ்டிரைக் அறிவித்தார்கள். கடந்த ஆண்டே இப்படிப்பட்ட அறிவிப்பு தமிழிில் வெளியானது. நவம்பர் மாதத்துக்குபின் எந்த பட வேலைகளுக்கும் இருக்க கூடாது. படத்தயாரிப்பு பணிகள், ரிலீஸ், பூஜைக் கூடாது என்று சினிமா சங்கங்கள் அறிவித்தன. ஆனால், பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. அனைத்து சினிமா சங்கங்கள் சார்பில் சரியான முடிவு எடுக்கப்படவில்லை.
இப்போதும் ஸ்டிரைக் குறித்து பேசப்பட்டாலும் அது நடக்க சாத்தியமில்லை. காரணம், சினிமாவை நம்பி நேரடியாக, மறைமுகமாக மொத்தம் 15லட்சம்பேர் இருப்பதாக தகவல். 23 சினிமா தொழிற்சங்கள், அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் என இந்ததுறை பெரிது. ஸ்டிரக் அறிவித்தால் தயாரிப்பாளர்கள்,சில இயக்குனர்கள், நடிகர்களுக்கு கவலை இல்லை. ஆனால், தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும், பசி, பட்டினி, கடன் பிரச்னை உருவாகும். இது தமிழக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும். மேலும், பட தயாரிப்பு பணிகளை நிறுத்தினால், ரிலீசை தள்ளி வைத்தால் இப்போது படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். நடைமுறை சிக்கல்களால் அதிக கடன்சுமைக்கு ஆளாவார்கள். பெரிய படங்களுக்கு கால்ஷீட் பிரச்னை ஏற்படும். அதனால், லாபம் சம்பாதிக்க என்ன வழி, செலவுகளை குறைக்க என்ன வழி என்பது குறித்து யோசிப்பதே நல்லது.