சென்னையில் சாலைகள் போடும் பணிக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கியும், சாலைகள் படு மோசமாக உள்ளன.
குறிப்பாக, சென்னையுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், வட சென்னையிலும் சாலைகள் படு மோசமாக உள்ளன. பள்ளங்கள் நிறைந்து, பயணிக்க முடியாத அளவுக்கு சேதம் அடைந்துள்ளன. ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 18,895 சாலைகள் உள்ளன. இதில் 15,107 சாலைகளில் வேலை முடிந்ததாக சொல்கிறார்கள். நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் (NSMT), தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் (TURIF) மற்றும் சென்னை மாநகராட்சி நிதியில் இருந்து மொத்தம் ரூ2,221 கோடி சாலை பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.1,692 கோடி செலவு செய்து முடித்ததாக சொல்கிறார்கள். ஆனால், மக்கள் தொடர்ந்து சாலை சரியில்லை என்று புகார் கூறுகிறார்கள்.
பல வருடங்களாக, சென்னையின் மையப் பகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளையும், வட சென்னையின் சில பகுதிகளையும் கண்டுகொள்ளவில்லை. பல உட்புற சாலைகளை யாரும் கவனிக்கவில்லை. சென்னை மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பல சாலைகள் இன்னும் போடப்படாமலேயே இருக்கின்றன. புகார் கொடுத்தால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் மெட்ரோ வாட்டர் அல்லது மெட்ரோ ரயில் பணிகள் தான் காரணம் என்று சொல்கிறார்கள்.
கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக பேசுகையில், “2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சாலைகள் போடப்பட்டன. ஆனால், உடனே Tangedco (மின்சார வாரியம்) கேபிள் போடுவதற்காக தோண்டினார்கள். அது முடிந்ததும், சாலைகளை சரி செய்வார்கள் என்று பார்த்தோம். ஆனால், Metrowater (குடிநீர் வாரியம்) குழாய் பதிப்பதற்காக தோண்டினார்கள். அந்த வேலையும் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் சென்னை மாநகராட்சி சாலைகளை சரி செய்யவில்லை. கேட்டால், நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று சொல்கிறார்கள். கொட்டிவாக்கம் சென்னை மாநகராட்சியில் இணைந்து பத்து வருடங்கள் கழித்து சாலைகள் போடப்பட்டன” என்று கூறுகின்றனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் இது தொடர்பாக பேசும் போது, “நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் (NSMT) மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் (TURIF) திட்டத்தின் கீழ் சாலைகளை சரி செய்ய ரூ 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து ரூ.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும்” என்றார்.