ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘மதராஸி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் பிறந்தநாளை நேற்று முறைப்படி தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தலைப்பில் ஒரு படம் வந்துள்ளது. ஆம், அர்ஜூன், வேதிகா நடிக்க 2006ம் ஆண்டில் வெளியான படத்தின் தலைப்பு ‘மதராஸி’. எதற்காக அதே தலைப்பு என்று படக்குழுவிடம் விசாரித்தால், பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்கள்
‘‘யெஸ், மதராஸி என்ற தலைப்பு வந்துள்ளது.அந்த படத்தை அர்ஜூனே இயக்கி நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் அந்த படம் வெளியானது. வேதிகா அந்த படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். பெரியளவில் படம் ஹிட் ஆகவில்லை. முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் படத்துக்கு ‘சிங்க நடை’, ‘சிங்கமுகம்’ உட்பட பல்வேறு தலைப்புகள் பரிசீலனை செய்யப்பட்டன. கடைசியில், மதராஸி என்பது ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. வட மாநிலங்களில் தமிழர்களை மதராஸி என அழைப்பார்கள். இன்னமும் அந்த வழக்கம் இருக்கிறது.
கதைக்கும், இந்த தலைப்புக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. தவிர, இப்போது பெரிய ஹீரோக்களின் படங்கள் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகிறது. அமீர்கானை வைத்து கஜினி என்ற ஹிட் கொடுத்ததால், இந்தியில் முருகதாசுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. இப்போது கூட சல்மான்கானை வைத்து ‘சிக்கந்தர்’ என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். அமரன் வெற்றிக்குபின் சிவகார்த்திகேயனுக்கும் இந்தியில் பெரிய மார்க்கெட் உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட பல விஷயங்களை கூட்டி கழித்துதான் ‘மதராஸி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பக்கா ஆக்ஷன் படம். விஜயை வைத்து துப்பாக்கி எடுத்த மாதிரி, சிவகார்த்தியேனை மதராஸியில் வேறு மாதிரி காண்பிக்கிறார் முருகதாஸ். சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல கன்னட நடிகை ருக்மினிவசந்த் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி, விரைவில் படம் ரிலீஸ் ஆகிறது’’ என்கிறார்கள்.