ஒரு நாள் முன்பு வரை யாரென்றே தெரியாத நபர், ஒரே நாளில் ஹீரோவாவது கிரிக்கெட்டில் அடிக்கடி நடக்கும் விஷயம். அந்த வகையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மூலம் ஒரே நாளில் பிரபலமாகி இருக்கிறார் இலங்கை வீர்ர் துனித் வெல்லாலகே. மிக வலிமையான இந்திய பேட்டிங் வரிசையை தனது சுழற்பந்து வீச்சு மூலம் சரசரவென வீழ்த்தி இருக்கிறார் இந்த 20 வயது கிரிக்கெட் வீர்ர்.
ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்டியா என்று வெல்லாலகேவிடம் அவுட் ஆன ஒவ்வொரு வீரரும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள். பாகிஸ்தான் அணியிடம் நேற்று முன்தினம்தான் இந்த பேட்டிங் வரிசை தனது பராக்கிரமத்தைக் காட்டியிருந்தது. 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்களை குவித்திருந்தது. அந்த அளவுக்கு வலிமையான இந்திய பேட்டிங் வரிசையை அடுத்த நாளிலேயே 213 ரன்களில் ஆல் அவுட்டாகச் செய்ய வெல்லாலகேயின் பந்துவீச்சு உதவியிருக்கிறது. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் இந்தியாவுக்கு எதிராக கடைசிவரை தம் கட்டிக்கொண்டு நின்ற வெல்லாலகே 42 ரன்களை எடுத்து அவுட் ஆகாமல் நின்றார்.
இப்படி பேட்டிங், பந்துவீச்சு ஆகிய 2 துறையிலும் இந்திய அணிக்கு சவால் விட்டு நின்றதால் ஒரே நாளில் இலங்கை அணியின் நட்சத்திர வீர்ராகி இருக்கிறார் வெல்லாலகே. அத்துடன் யார் இந்த வெல்லாலகே என்ற கேள்வியும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எழுந்திருக்கிறது.
மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தவர்தான் வெல்லாலகே. இலங்கையின் தலைநகரான கொழும்புவில் 2003-ம் ஆண்டில் பிறந்தவர் வெல்லாலகே, 1996-ம் ஆண்டில் இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றபோது, அதன் தொடக்க ஆட்டக்காரராக வந்து அதிரடி காட்டிய கலுவிதாரணாவை ஞாபகம் இருக்கிறதா? அந்த கலுவிதாரணாவின் சொந்த ஊரான மொராடுவாதான் வெல்லாலகேவின் ஊர். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்த வெல்லாலகேவின் திறமையை வளர்த்தெடுத்த்து அவர் படித்த செயிண்ட் ஜோசப்ஸ் கல்லூரி.
கொழும்புவில் உள்ள இந்த கல்லூரியில் படித்த காலத்தில், அதற்காக பல போட்டிகளில் ஆடி தனது திறமையை நிரூபித்தார் வெல்லாலகே. பார்ப்பதற்கு நோஞ்சான் போல இருந்த வெல்லாலகேவை குறைத்து மதிப்பிட்ட பல அணிகளும் மைதானத்தில் அதற்கான விலையைக் கொடுத்தன. தங்கள் விக்கெட்களை அவரிடம் இழந்தன.
வெல்லாலகேவுக்கு 16 வயதாக இருந்தபோதே, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆட அவர் தேர்ந்தெடுக்கப்பாட்டார். ஆனால் தேர்வு எழுத வேண்டி இருந்ததால் அந்த முறை இலங்கை அணிக்காக அவரால் ஆட முடியவில்லை. ஆனால் அதற்கும் சேர்த்து கடந்த ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணிக்கு தலைமை ஏற்றார். இந்த தொடரில் அவர் 17 விக்கெட்களை வீழ்த்தியதுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் 113 ரன்களையும் குவித்தார். இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழுவின் பார்வை இவர் மீது பட்டது.
2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் வெல்லாலகே சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெல்லாலகே ஆடியிருக்கிறார். இலங்கை அணிக்காக இதுவரை 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ள வெல்லாலகே நேற்றைய போட்டியின் மூலம் புகழ் வெளிச்சத்தில் சிக்கியிருக்கிறார்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை இப்போதைக்கு உலகக் கோப்பைக்கான வீர்ர்கள் பட்டியலில் ஸ்டாண்ட் பை வீர்ராகத்தான் வெல்லாலகே இருக்கிறார். ஆனால் நேற்றைய போட்டி, நிச்சயம் அவரை அணிக்குள் கொண்டுவரும் என்று நம்பலாம். அத்துடன் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் இவரை வாங்க கோடிக்கணக்காக பணத்தை கொட்டிக் கொடுக்கவும் பல அணிகள் தயாராகும்.
நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல், “இன்றைய போட்டியில் நாங்கள் வெல்லாலகேவிடம் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்துவிட்டோம். அடுத்த போட்டியில் அவருக்கு எதிராக புதிய வியூகம் வகுப்போம், சரியான திட்ட்த்துடன் அவரை எதிர்கொள்வோம்” என்று கூறியிருக்கிறார்.