தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் விஜய் ஒரு குட்டி கதை சொல்லியுள்ளார். அந்த கதையில் சிறுவயதில் எதிரிகளை வென்ற சிறுவனான ஒரு பாண்டிய மன்னனைப் பற்றி விஜய் குறிப்பிட்டார்.
“ஒரு நாட்டில் ஒரு பெரிய போர் வந்ததாம். அப்போது பவர்ஃபுல்லான தலைமை இல்லாததால், ஒரு சின்ன குழந்தையிடம் பொறுப்புகள் இருந்ததாம். அப்போது நாட்டில் இருந்த பெருந்தலைகள் எல்லாரும் பயந்துவிட்டனர். ஆனால் அந்த சின்ன பையன் படைகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போருக்கு போலாம் என்று சொன்னானாம்.
அப்போது அந்த பெருந்தலைகள் எல்லோரும், “இது சாதாரண விஷயமில்லை. நீ ஒரு சின்னப் பையன். அங்க பவர்ஃபுல்லான எதிரிகள் இருப்பார்கள். இது ஒன்றும் விளையாட்டு கிடையாது நீ பாட்டுக்கு விளையாடிவிட்டு ஓடி வருவதற்கு… போர் என்றால் படையை நடத்த வேண்டும். எதிரிப்படைகளை சமாளிக்க வேண்டும், அதைவிட முக்கியமாக ஜெயிக்க வேண்டும். உனக்கோ கூட்டமோ துணையோ யாரும் இல்லை. நீ எப்படி இந்தப் போரை நடத்துவ, எப்படி ஜெயிப்ப” எனக் கேட்டார்களாம்.
அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் நாட்டின் படைகளை நடத்திக் கொண்டு சென்ற அந்த பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த சின்ன பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். படிக்காதவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், கெட்ட பையன்சார் அந்த சின்ன பையன்” என்று விஜய் அந்த கதையில் கூறியிருக்கிறார்.
விஜய்யின் இந்த பேச்சை தொடர்ந்து அந்த மன்னன் யார் என்ற தேடலில் பலரும் ஈடுபட்டுள்ளனர். சங்க இலங்கியங்களின்படி தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற மன்னன் தான் தவெக தலைவர் கூறிய அந்த சிறுவன்.
நெடுஞ்செழியன் சிறுவயதில் தனது தந்தையை இழந்ததால் மன்னராக ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போது அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என சோழ அரசன் பெருநற்கிள்ளி, சேர மன்னன் மாந்தரஞ்சேரல் மற்றும் இன்னபிற குறுநில மன்னர்கள் இணைந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர்.
தற்போதைய அரசன் நெடுஞ்செழியன் சிறுவன். அவனால் தங்களை வீழ்த்த முடியாது என எண்ணினர். ஆனால் வீரமிகு நெடுஞ்செழியன் எதிரி படைகளை தலையாங்கானம் என்ற ஊரில் எதிர்கொண்டு தீரமுடன் சண்டையிட்டார். அதில் பின்வாங்கிய படைகள் சோழ தேசத்திற்குள்ளேயே திரும்ப ஓடியபோது நெடுஞ்செழியன் விரட்டி சென்று போரை வென்றதால் அவன் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என அழைக்கப்படலானான். நெடுஞ்செழியனுக்கு மறப்போர்ச் செழியன், கடும்பக்கட்டு யானை நெடுந்தேர் செழியன் என்ற பட்ட பெயர்களும் உண்டு.