சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட ஆம்ஸ்ட்ராங், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அவரது தந்தை திராவிடர் கழகத்தில் இருந்ததால், அவரும் சிறுவயதில் இருந்தே திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்டிருந்தார். அம்பேத்கரின் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங், 2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார்.
பூவை மூர்த்தியின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி தனித்து செயல்பட்டார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து தொடங்கியிருக்கிறார்.
அதே ஆண்டில் காலகட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இடும்பன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. அதன் மூலம், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து 99 வார்டில் போட்டியிட்டார்.
அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை முறியடித்து சென்னையில் ஒரு வார்டில் அவர் வெற்றி பெற்றது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர் வெற்றி பெற்றது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2007-ம் ஆண்டு முறைப்படி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த ஆம்ஸ்ட்ராங்கை அக்கட்சியின் தலைவராக மாயாவதி நியமித்தார். அப்போது முதல் அவர் அக்கட்சிக்காக தீவிரமாக இயங்கி வருகிறார். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக அவர் இருந்து வருகிறார்.
2011-ல் கொளத்தூரில் ஸ்டாலின் 2,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இந்த தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் 3,894 வாக்குகளை பெற்றார். இத்தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் நிற்காமல் இருந்தால், அதில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வெற்றிபெற்றிருப்பார் என்று அப்போது பேசப்பட்டது.
இப்படி ஒரு அரசியல் முகம் இருந்தாலும் ரவுடி, கட்ட பஞ்சாயத்து செய்பவர், அடிதடி ஆசாமி என்ற முகங்களும் ஆம்ஸ்டாராங்குக்கு உண்டு. அவர் மீது பல வழக்குகள் உள்ளன.
எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து உண்டு என்பதை அவர் அறிந்தே இருந்தார். தன்னைச் சுற்றி குறைந்தது பத்து பேரை எப்போதும் பாதுகாப்புக்காக வைத்து இருப்பார். தவிர, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருந்தார்.
தனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து இருக்கலாம் என்பதால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த ஆம்ஸ்ட்ராங், ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் 45வது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 1 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையின் பிறந்தாளை சமீபத்தில்தான் கொண்டாடி இருக்கிறார். இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.