ஜமா (தமிழ்) – அமேசான் ப்ரைம்
திருவண்ணாமலையில் தெருக்கூத்துகளில் பெண் வேடம் கட்டும் நாயகன், தன் அப்பாவிடம் இருந்து சதியால் கைப்பற்றப்பட்ட தெருக்கூத்து ஜமாவை மீட்பதற்கும், அர்ஜுனன் வேடம் போடுவதற்கும் நடத்தும் போராட்டமே ‘ஜமா’ படத்தின் கதை. அதன் நடுவில் ஒரு காதல் கதை, ஜாதி பிரச்சினை என பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன். இளையராஜாவின் மனதை வருடும் இசை, நாட்டுப்புற பாரம்பரிய கலைஞர்களின் வாழ்க்கைச் சூழல் என ரசிக்கக்கூடிய பல அம்சங்களைக் கொண்ட இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
மென்மையான கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் இது.
மனோரதங்கள் (மலையாளம்) – ஜீ5
மலையாளத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர் எழுதிய 9 மிகச் சிறந்த கதைகளை மனோரதங்கள் என்ற பெயரில் வெப் தொடராக எடுத்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு கதைக்கும் கமல் முன்னுரை சொல்கிறார். மம்முட்டி, மோகன்லால், பகத் ஃபாசில், சித்திக், பார்வதி, நெடுமுடி வேணு, ஆசிப் அலி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த கதைகளில் நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான கதைகளை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார்.
எல்லா கதைகளையும் ஒரே நாளில் பார்ப்பதைவிட ஒரு கதையை ஒரு நாளில் பார்ப்பது நல்லது. அப்போதுதான் அந்த கதைகளை முழுமையாக உள்வாங்க முடியும். இந்த சிறுகதை தொடரை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
IC814 (ஐசி814 – இந்தி):நெட்பிளிக்ஸ்
1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளத்தின் காட்மாண்டு நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் கடத்தப்பட்டது. பாகிஸ்தனைச் சேர்ந்த ஹர்கத் – உல்- முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்த விமானக் கடத்தலில் ஈடுபட்டனர். தாங்கள் கடத்திய விமானத்தை ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்கு கொண்டுசென்ற அவர்கள், விமானத்தை விடுவிக்க வேண்டுமென்றால் இந்திய சிறைகளில் இருந்த மசூத் அசார் உள்ளிட்ட முக்கியமான 3 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தனர். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசும், வேறு வழியில்லாமல் மசூத் அசார் உள்ளிட்ட தீவிரவாதிகளை விடுவித்து விமானத்தை மீட்டது.
இந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஐசி814 வெப் தொடர் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. னுபவ் சின்ஹா இயக்கியுள்ள இந்த தொடரில் நடிகர்கள் விஜய் வர்மா, நசிருதீன் ஷா, பங்கஜ் கபூர், மனோஜ் பஹ்வா, அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்சா, பத்ரலேகா, அம்ரிதா புரி, திபியேந்து பட்டாச்சார்யா மற்றும் குமுத் மிஸ்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
காந்தகர் விமான கடத்தல் பற்றிய உண்மைகளை அறிய இந்த தொடர் உதவும்.
கில் (இந்தி) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர். இவர் தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் ஆக்சன் படமான ‘கில்’ படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தன்யா மணிக்தலா, ராகவ் ஜுயல் மற்றும் லக்சயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.