தி லெஜண்ட் (தமிழ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகி கடந்த ஆண்டு வெளியான படம் லெஜண்ட். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான இப்படம் இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டில் மிகப் பெரிய விஞ்ஞானியாக இருக்கும் லெஜண்ட் சரவணன், தனது மக்களுக்காக உழைக்க தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார். தனது உறவினர் ரோபோ ஷங்கர் சர்க்கரை நோயால் இறக்க, அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்குகிறார். இது பிடிக்காத மருந்து மாஃபியா, அவருக்கு பல்வேறு தொல்லைகளைத் தருகிறது. அவர்கள் தரும் தொல்லைகளைக் கடந்து சரவணனால் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
முக்கிய பிரச்சினையை கையாண்டிருக்கும் படமாக இது இருந்தாலும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் பார்த்துப் பழகிய லெஜண்ட் சரவணனை ஹீரோவாக பார்க்கும்போது பல சீரியஸ் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன.
தங்கம் (Gold – மலையாளம்) – அமேசான் பிரைம்
கேரளாவில் இருந்து கிலோக்கணக்கில் தங்கத்தை எடுத்துச் செல்லும் ஏஜண்டான வினீத் சீனிவாசன், மும்பையில் அவரது ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மும்பை போலீஸார், அவரது நன்பர்களிடமும், உறவினர்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். மகாராஷ்டிரா தொடங்கி கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் அவர்கள் நடத்தும் விசாரணைக்குப் பிறகு வினீத் சீனிவாசன் மரணம் பற்றிய உண்மைகள் தெரியவருகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கதை.
துப்பறியும் கதைகளை சிறப்பாக கையாளும் மலையாள திரையுலகம் இப்படத்தின் மூலம் இதில் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. ஆனால் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மலையாளம், இந்தி, தமிழ் என்று 3 மொழிகளைப் பேசுவதால் படத்தோடு சரியாக ஒட்ட முடியவில்லை.
Physical 100 – ஆங்கிலம் – நெட்பிளிக்ஸ்
பிக் பாஸ், சூப்பர் சிங்கர் போல இதுவும் ஒரு ரியாலிடி ஷோதான். ஆனால் இந்த ரியாலிடி ஷோ முழுக்க முழுக்க உடல்திறனை அடிப்படையாக கொண்டது. தென் கொரியாவில் மிகச்சிறந்த உடல் உறுதி கொண்ட 100 பேர், தங்களில் வலிமயானவர் யார் என்பதை நிரூபிக்க நடத்தப்படும் போட்டிகளை அடிப்படையாக கொண்டு இந்த ஷோ உள்ளது. இதில் தங்கள் உடல் உறுதிக்கு சவால் விடும் பல்வேறு போட்டிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை நகம் கடித்தபடி டென்ஷனுடன் பார்க்கலாம்.
ஒருசில சவால்களை அதேபோல் வீட்டில் செய்துபார்க்க குழந்தைகள் முயற்சிப்பார்கள் என்பதை கழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இதைப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
இரு துருவம் (தமிழ் வெப் சீரிஸ்) – சோனி லைவ்
சோனி லைவ் ஓடிடி தலத்தில் 2019-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இரு துருவம் – வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் இப்போது அதே தளத்தில் வெளியாகி உள்ளது. அருண் பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள இத்தொடரில் பிரசன்னா, நந்தா, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காணாமல் போன தன் மனையை தேடிக்கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரியான நந்தா. மறுபக்கம் நகரில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது கொலையாளி, தன்னால் பலியானவருக்கு பக்கத்தில் ஒரு திருக்குறளை எழுதி வைக்கிறார். அந்த கொலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு நந்தாவுக்கு வருகிறது.
கொலையாளியையும், தன் மனைவியையும் அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே இத்தொடரின் கதை.
பரபரப்பான க்ரைம் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற வெப் சீரிஸ் இது.