அயலி ( Ayali – வெப் சீரிஸ் -தமிழ்) – ஜீ 5
பெண்கள் வயதுக்கு வந்தால் அவர்களின் படிப்பை நிறுத்தி திருமணம் செய்துவைக்கும் வழக்கம் வீரபண்ணை கிராமத்தில் இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த தமிழ்ச் செல்விக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவு. தன் கனவை நிறைவேற்றிக்கொள்ள, தான் வயதுக்கு வந்த விஷயத்தையே மறைத்துக்கொண்டு வாழ்கிறாள். இதில் அவள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன? அவளது கனவு நனவானதா என்பதுதான் ‘அயலி’ வெப் சீரிசின் கதை.
1990-களின் முற்பகுதியில் நடப்பதுபோல் இத்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் படிப்பதற்கு உள்ள தடைகளை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார் இயக்குநர் முத்துகுமார்.
காதல், ஆக்ஷன் மற்றும் காமெடியை களமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு நடுவில் பெண் கல்வி என்ற சமூக பிரச்சினையை களமாக வைத்து இத்தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.
த்ரிஷ்யம் 2 (Drishyam 2 – இந்தி) – அமேசான் பிரைம்
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் (தமிழில் ‘பாபநாசம்’) படம் பின்னர் இந்தியில் அதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற அப்படத்தின் இரண்டாம் பாகம்தான் த்ரிஷ்யம் -2.
போலீஸ் அதிகாரியின் மகன் கொலை வழ்க்கில் இருந்து விஜய்யும் அவரது குடும்பமும் விடுவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் முடிகின்றன. முன்பு விஜய் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பாசமாக இருந்த ஊர் மக்கள், இப்போது அவர் பணக்காரர் ஆகிவிட்டதால் பொறாமையோடு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பழைய கொலைவழக்கை மீண்டும் கையில் எடுக்கிறது போலீஸ். இம்முறை விஜய் தனது குடும்பத்தை எப்படி காற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
அபிஷேக் பதக் இயக்கியுள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், ஷ்ரியா சரண், தபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் இது.
லலிதம் சுந்தரம் (Lalitham Sundaram – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
பல ஆண்டுகளாக பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்த 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும், தங்கள் அம்மாவின் நினைவு நாளுக்காக பிறந்த வீட்டுக்கு வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. ஈகோ காரணமாக சதா மோதிக்கொண்டு இருக்கும் அவர்களின் வாழ்க்கையில் பிறந்த வீட்டில் இருக்கும் நாட்கள் கொண்டுவரும் மாற்றத்தை அழகிய கவிதைபோல் சொல்லியிருக்கிறார்கள்.
மஞ்சு வாரியர் பிஜு மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், ஒரு மென்மையான உணர்வை மனதில் படர விடுகிறது. சில நாட்களுக்காவது இப்படத்தின் கதையும், காட்சிகளும் நம் மனதில் நீங்காமல் இருக்கும்படி உள்ளது.
டாக் கோன் (Dog Gone – ஆங்கிலம்) – நெட்பிளிக்ஸ்
நாய்க்குட்டி ஒன்றை செல்லமாக வளர்க்கிறார் ஒரு கல்லூரி மானவர். முதலில் அவரது குடும்பத்தினருக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் நாளாக ஆக வீட்டில் உள்ள அனைவருக்கும் செல்லமாகிறது அந்த நாய். ஒரு நாள் அந்த நாய் காணாமல் போக, மொத்த குடும்பமும் அந்த நாயைத் தேடி அலைகிறது. அந்த நாய்க்கு என்ன ஆனது? அது மீண்டும் கிடைத்ததா என்பதுதான் படத்தின் கதை.