விடுதலை (தமிழ்) – ஜீ5
இயற்கை வளங்களை சுரண்டும் அரசை எதிர்த்து போராடும் புரசிப் படை தலைவர், அவரை பிடிக்க எந்த எல்லைக்கும் செல்லும் காவல்துறை அதிகாரி, அவரது தலைமையில் உள்ள காவல்படையில் இருக்கும் மனசாட்சியுள்ள ஒரு போலீஸ்காரர் என 3 பிரிவினருக்கும் இடையிலான போராட்டம்தான் விடுதலை.
காமெடி நடிகராக மட்டுமே பார்க்கப்பட்ட சூரிக்கு இப்படத்தின் மூலம் புதிய பரிணாமத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் வெற்ரிமாறன். அவருக்கு இணையான நடிப்பை விஜய் சேதுபதி, சேத்தன் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் கொடுத்துள்ளனர்.
வன்முறைக் காட்சிகள் அதிகம் என்பதால் குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இப்படத்தை பார்ப்பதை தவிர்க்கலாம்.
பத்து தல (தமிழ்) – அமேசான் ப்ரைம்
ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த ‘பத்து தல’ இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் திடீரென்று காணாமல் போக, அதற்கு மணல் கொள்ளை சாம்ராஜ்யத்தை நடத்திவரும் ஏஜிஆர் (எஸ்டிஆர்) காரணமோ என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக துப்பறிய அவரது கும்பலில் ஒரு அடியாளாக நுழைகிறார் காவல்துறை அதிகாரி சக்தி (கவுதம் கார்த்திக்). முதல்வர் பற்றிய உண்மையை அவர் கண்டுபிடித்தாரா? ஏஜிஆரை அவரால் கைது செய்ய முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்குப் பின் அதேபோன்றதொரு மாஃபியா கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் எஸ்டிஆர். ஆனால் முன்னதில் இருந்த பரபரப்பு இப்படத்தில் இல்லை. படத்தின் பாதியில்தான் எஸ்டிஆர் வருகிறார் என்பதால், கவுதம் கார்த்திக்தான் இப்படத்தின் நாயகனோ என்ற சந்தேகம் ஒரு கட்டத்தில் ஏற்படுகிறது. ஆனால் பாதியில் வந்தாலும் அதன்பிறகு ஒன்மேன் ஆர்மியாக படத்தை தூக்கிச் சுமக்கிறார் .
எஸ்டிஆர். அவருக்காக ஒருமுறை இப்படத்தைப் பார்க்கலாம்.
செல்ஃபி (Selfie – இந்தி) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘டிரைவிங் லைசன்ஸ்’ படத்தின் இந்தி ரீமேக்தான் செல்ஃபி. ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
போக்குவரத்து காவலரான இம்ரான் ஹாஷ்மி, மெகா ஸ்டாரான அக்ஷய் குமாரின் தீவிர ரசிகன். ஒரு படப்பிடிப்புக்காக அக்ஷய் குமாருக்கு அவசரமாக டிரைவிங் லைசன்ஸ் தேவைப்படுகிறது. தன் விருப்பத்துக்குரிய நடிகர் என்பதால் தேர்வு ஏதும் இல்லாமலேயே அதைத் தர ஒப்புக்கொள்கிறார் இம்ரான் ஹாஷ்மி. அதை வாங்க அக்ஷய் குமார் வரும் நாளில் தனது மகனையும் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அங்கு ஏற்படும் குழப்பத்தால் மகன் முன்னிலையில் இம்ரான் ஹாஷ்மியிடம் அக்ஷய் குமார் கோபமாக நடந்துகொள்கிறார்.
மகன் முன் அக்ஷய் குமார் தன்னை அவமானப்படுத்தியதாக கொந்தளிக்கும் இம்ரான் ஹாஷ்மி, இனி தேர்வுகளுக்கு பிறகே டிரைவிங் லைசன்ஸ் தர முடியும் என்று நிபந்தனை விதிக்கிறார். அவருக்கு எளிதில் லைசன்ஸ் கிடக்காமல் இருக்க தடைகளைப் போடுகிறார். அக்ஷய் குமாரால் லைசன்ஸ் வாங்க முடிந்ததா? இருவரின் ஈகோ யுத்தம் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.
தசரா (Dasara – தெலுங்கு) – நெட்பிளிக்ஸ்
கேஜிஎஃப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சுரங்கங்களை மையமாக வைத்த படங்கள் தென்னிந்தியாவில் அதிகம் வெளிவருகின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும் படம் தசரா. ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடித்துள்ள தசரா இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழிலும் இப்படத்தைக் காணலாம்.