ஃபாலிமி ( Falimy – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
குடும்பத்தை ஆங்கிலத்தில் family என்று சொல்வார்கள். ஆனால் பல விஷயங்களில் ஒத்துப்போகாத நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தை எப்படி family என்று சொல்ல முடியும்? அதனால்தான் இந்த படத்துக்கு Falimy என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சகதேவ்.
காசிக்கு போவதற்காக அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப்போகும் தாத்தா, குடும்பப் பொறுப்பில்லாத அப்பா, திருமணத்துக்கு பெண் கிடைக்காத, குடும்ப பொறுப்பை சுமக்கும் மூத்த மகன், வெளிநாடு போகும் ஆசையில் இருக்கும் இளைய மகன், இவர்களை கரைசேர்க்க விரும்பும் அம்மா ஆகியோர்தான் இந்த குடும்பத்தின் உறுப்பினர்கள்.
ஒரு கட்டத்தில் தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து காசிக்கு ரயில் ஏறுகிறார்கள். ஆனால் சந்தர்ப்பவசத்தால் வழியில் ஒரு ஸ்டேஷனில் இறங்க வேண்டி வருகிறது. அது அவர்களுக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது. அவர்களால் காசிக்கு போக முடிந்ததா? அந்த பயணம் அவர்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்ன? குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சகதேவ்.
கலகலப்பான குடும்பக் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது. தமிழிலும் இப்படத்தைப் பார்க்கலாம்.
தமிழ்க்குடிமகன் (தமிழ்) – ஆஹா
கிராமத்தில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை காலம் காலமாக செய்துவரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் சேரன். இந்த குலத்தொழிலை விட்டுவிட்டு அரசாங்க வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார். ஆனால் ஜாதித் திமிர் பிடித்த சிலர் இதைத் தடுக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அவர் பால் வியாபாரம் செய்து பிழைக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஊர் பெரிய மனிதர் ஒருவர் இறக்க, அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்ய சேரனை கட்டாயப்படுத்துகிறார்கள். சேரன் மறுக்க, அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை சேரன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
கிராமப் புறங்களில் இன்றும் நிலைத்திருக்கும் ஜாதிக் கொடுமைகளைச் சொல்லும் படமாக தமிழ்க்குடிமகன் இருக்கிறது.
80-ஸ் பில்டப் (தமிழ்) – அமேசான் ப்ரைம்
கல்யாண் இயக்கத்தில் சந்தானம், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் நடித்த பில்டப், இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
சந்தானத்தின் தாத்தா சுந்தர்ராஜன், மின்சாரம் பாய்ந்து இறந்து விடுகிறார். சாவுக்கு வரும் உறவிவினர் வீட்டு பெண்ணான ராதிகா ப்ரீத்தியை சந்தானம் காதலிக்கிறார். சாவு தொடர்பான சம்பிரதாயங்கள் முடியும் முன் அவரை கவர திட்டமிடுகிறார் சந்தானம். சந்தானத்தால் ராதிகா ப்ரீத்தியை கவர முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. இதில் தாத்தாவின் உயிரைக் கவர்ந்து செல்ல வரும் எமனாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார்.
80-களின் காலகட்டத்தில் அமைந்த நகைச்சுவைப் படமாக இதை எடுத்திருக்கிறார்கள்.
மார்ட்டின் லூதர் கிங் ( Martin Luther King – தெலுங்கு) – சோனி லைவ்
யோகிபாபு நடிப்பில் தமிழில் வெளியான ‘மண்டேலா’ படத்தின் தமிழ் ரீமேக்தான் மார்ட்டின் லூதர் கிங். இதில் யோகிபாபுவின் கதாபாத்திரத்தில் சம்பூர்ணேஷ் பாபு நடித்துள்ளார்.
கிராமத்தில் யாராலும் மதிக்கப்படாத மனிதனாக இருக்கும் ஒருவரின் ஓட்டு கிராமத்தின் தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் நிலை வருகிறது. அதுவரை புறக்கனிக்கப்பட்டு வந்த மனிதர் அந்த ஒற்றை ஓட்டு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த மனிதராக மாற்றுகிறது என்பதே படத்தின் கதை.
சீரியசான பிரச்சினையை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பூஜா கொல்லூரு.