விஷாலுக்கும், லைக்கா ப்ரொடக்ஷன்ஸூக்கும் இடையே இருக்கும் சிக்கல், பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், மோதல் உச்சத்தில் இருக்கிறது என்கிறார்கள். இதனால் விஷால் சிறைக்குச் செல்லும் வாய்ப்பும் இப்போது உருவாகி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இந்த பஞ்சாயத்து பற்றி முன்பே வாவ் தமிழாவில் எழுதியிருந்தாலும். அதை நினைவுப்படுத்தும் விதமாக மீண்டும் சுருக்கமாக பார்க்கலாம்.
மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வந்த விஷால், தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தொடங்கிய தயாரிப்பு நிறுவனம்தான் ’விஷால் ஃப்லிம் ஃபேக்டரி’. தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தான் நடிக்கும் படங்களை தயாரித்து வந்தார் விஷால்.
சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும், தோல்விப் படங்கள் விஷாலை ரொம்பவே பதம் பார்த்துவிட்டன. இதனால் கடன் சுமைக்கு உள்ளானார் விஷால். அப்போதுதான் தமிழ் சினிமாவில் தனது தயாரிப்பை தொடங்கியிருந்த லைகா ப்ரொடக்ஷன்ஸ், தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் பெற விரும்பி தானாகவே பல முயற்சிகள், உதவிகளில் இறங்கியது. அந்த வகையில் விஷாலுக்கு இருந்த கடனை அடைக்க லைகா முன்வந்தது.
விஷால் தனது பட தயாரிப்புக்காக தமிழ் சினிமாவின் பிரபல பைனான்ஷியர் கோபுரம் ஃப்லிம்ஸின் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். தோல்வி படத்தினால் கடனை அடைக்க முடியாமல் ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் வட்டி கட்டிகொண்டிருந்தார் விஷால்.
இந்த கடனை அடைக்க லைகா முன்வந்தது. குறிப்பிட்ட காலத்தில், விஷால் நடிக்கவிருக்கும் படங்களின் வெளியீட்டு உரிமைகளின் மூலம் அந்த கடனை அவர் திருப்பி செலுத்த வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டதாம் ஆனால் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. விஷால் அடுத்தடுத்து படங்களும் தயாரிக்கவில்லை. இதனால் கடன் அப்படியே வட்டியோடு அதிகமாகிக் கொண்டே வந்தது.
விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய சங்கங்களில் முதன்மைப் பதவிகளில் தொடர்ந்து இருந்து வந்ததால் எப்படி நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் லைகா தரப்பில் தயக்கம் இருந்து வந்ததாம்.
இதனால்தான் லைகா வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடியது என்று கூறுகிறார்கள். 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடரப்பட்டாலும், விசாரணை சூடுப்பிடிக்கவில்லை. பல முறை இந்த வழக்கு ஒத்திப் போடப்பட்டு வந்தது.
ஒரு வழியாக இந்த வழக்க விசாரித்த தனி நீதிபதி, விஷால் குறிப்பிட காலத்திற்குள் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் விஷால் தனது சொத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார். தனிநிதீபதி இட்ட உத்தரவை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்துவிட்டது.
இதனால் விஷாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தொடர் தோல்விகளால் விஷாலுக்கு பெரும் வியாபாரமும் இல்லை. சம்பளமும் பெரியளவில் இல்லை. ஆனாலும் வாங்கிய கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் விஷால்.
இதைச் சமாளிக்க விஷால் தரப்பில் முன்னணி வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியனை நாடியிருக்கிறார்கள். அவரும் விஷாலுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தில் ஆஜரான அரவிந்த் பாண்டியன், விஷால் இந்த பிரச்சினையை சுமூகமாக முடிக்கவே விரும்புகிறார். இடையில் இருக்கும் சிக்கல்களைத் தீர்க்க ஒரு சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும். அதை முன்னெடுக்க ஒரு அரசு அதிகாரியை நியமித்து சமரசத்தை மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றத்தில் கூறினார்.
ஏற்கனவே தொடர் தோல்விகளாலும், கமர்ஷியல் நடிகர்களுக்கு சம்பளத்தை வாரி வாரி பல நூறு கோடிகளைக் கொடுத்து இருந்ததாலும், எப்படியாவது கொடுத்த பணத்தை வாங்கினால் போதுமென விஷால் தரப்பில் முன் வைக்கப்பட்ட யோசனைக்கு லைகா தரப்பில் உடனடியாக சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
எப்படியாவது பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். சமரசம் முயற்சி பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து ஒன்றுமே நடக்கவில்லை.
‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிப்பதற்காக விஷால் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் மீதமிருந்த தொகையை லைகாவுக்கு அளிக்கவும் திரும்ப பஞ்சாயத்து கிளம்பியது. ஆனால் அதுவும் கடந்து போனது. இதனால் லைகா தரப்பில் கிடுக்கிப்பிடி போட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாம். எப்படியாவது நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படவேண்டுமென லைகா திவீர முயற்சியில் இறங்கியிருக்கிறது என்கிறார்கள்.
வழக்கு இழுத்து கொண்டே போவதால், நீதிமன்றம் இறுதி விசாரணையை ஜூன் 28-ம் தேதி வைத்திருக்கிறது.
இறுதி விசாரணை என்பதால், வாங்கிய கடனை அடைத்தே ஆகவேண்டிய சூழலுக்கு விஷால் தள்ளப்பட்டிருக்கிறாராம். இறுதி விசாரணையின் போது, விஷால் வேண்டுமென்றே பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்று லைகா தரப்பில் தகுந்த ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டால், விஷாலுக்கு தண்டனை நிச்சயம் என்கிறார்கள். பண மோசடி என்று அவரை சிறைத்தண்டனை கொடுக்கவும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.
விஷால் வாங்கிய கடனை கொடுப்பாரா அல்லது நீதிமன்றத்தில் லைகா விடாப்பிடியாக இருக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.