நாகரிக உலகில் மனிதர்களுக்கு இல்லாமல் போன விஷயங்களில் ஒன்று தூக்கம். செல்போன், கம்ப்யூட்டர், டிவி என்று டிஜிடல் பிடிகளில் சிக்கியதால் 10 மணிக்கு தூங்கும் பழக்கத்தை பலரும் மறந்துவிட்டனர். இளைய தலைமுறையில் யாரைக் கேட்டாலும் ‘நாங்கள் தூங்குவதற்கு குறைந்தது 12 மணியாவது ஆகும்’ என்று பெருமையாக காலரை தூக்கி விட்டுக்கொண்டு சொல்வார்கள்.
ஆனால் இளம் தலைமுறையினர் பலரின் ஹீரோவாகக் கருதப்படும் விராட் கோலி எத்தனை மணிக்கு படுக்க செல்கிறார் தெரியுமா?… இரவு 9.30 மணிக்கு.
“கிரிக்கெட் போட்டிகளோ படப்பிடிப்போ இருக்கும் நாட்களில் நேரத்துக்கு தூங்க முடியாது. ஆனால் வேலை இல்லாத நாட்களில் சரியாக 9.30 மணிக்கெல்லாம் நாங்கள் தூங்கப் போய்விடுவோம். அதுதான் உடலுக்கு நல்லது’ என்று சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் கோலியின் மனைவி அனுஷ்கா.
திருமணத்துக்கு முன்பு பார்ட்டி அனிமலாக திரிந்து வந்தார் விராட் கோலி. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நட்சத்திரங்களின் நள்ளிரவு பார்ட்டிகளில் பிரபலமான முகங்களில் ஒன்றாக கோலி இருந்தார். ஆனால் திருமணத்துக்குப் பிறகு பார்ட்டிகளுக்கு குட்பை சொல்லிவிட்டார் கோலி. வேலை முடிந்தால் வீடு என்று வீட்டுப் பறவையாகிவிட்டார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதைப்பற்றி கூறியிருக்கும் அவர், “முன்பெல்லாம் பார்ட்டிகளில் 2 ரவுண்ட் உள்ளே சென்ற பிறகு டான்ஸ் ஆடுவேன். இப்போது அதெல்லாம் இல்லை. என் மனைவி மற்றும் குழந்தையுடன் நேரத்தைச் செலவிட பார்ட்டிகளுக்கு குட்பை சொல்லிவிட்டேன்” என்கிறார்.
விராட் கோலியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவன் மனைவி ஆகிய இருவரும் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் வீட்டு வேலைக்கென்று யாரையும் வைத்துக்கொள்ளவில்லை என்பதே அது. வேலைக்காரர்கள் யாரும் இல்லாததால் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அவர்களே கவனிக்கிறார்கள்.