விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடியவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரச்சாரத்தில் அனல் பறந்தது.
தொடர் தோல்வியால் அதிமுகவுக்கு பயம் – உதயநிதி
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விக்ரவாண்டி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
தொடர் தோல்வி பயத்தால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களுக்கு மட்டுமல்ல பாஜகவுக்கும் பயந்துதான், அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. நீட் தேர்வு வேண்டும் என சொல்லும் பாஜகவோடு பாமக கூட்டணி வைத்துள்ளது. நீட் விவகாரத்தில் திமுக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திமுகவின் அகங்காரத்தை தகர்க்கும் – ராமதாஸ்
பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் அதன் அகங்காரத்தையும், மக்கள்விரோத மனநிலையையும், சமூக அநீதி மனப்பான்மையையும் தகர்க்கும்.
அது கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த அனைத்து தவறுகளையும் திருத்துவதற்கு வழிவகுக்கும். கடந்த மூன்றாண்டுகளாக மறுக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்தப்படுதல், கல்வியிலும், சமூகநிலையிலும் பின்தங்கியுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு, விக்கிரவாண்டி தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மின்சாரக் கட்டண உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து சமூகநீதி நடவடிக்கைகளும் தானாக நடக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜக பிரமுகரும் நடிகருமான சரத்குமார், “நான் 1996 ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தை சந்தித்து வருகிறேன். 16 ஆண்டு காலம் சமத்துவ மக்கள் கட்சியை வழிநடத்தி இருக்கிறேன். காலத்தின் கட்டாயம் அப்படி சொல்லும் போது, இந்த முடிவை எடுத்தோம். நாடு வல்லரசாக உருவாகிக்கொண்டு இருக்கிறது. நாடு வல்லரசு ஆவதற்கு நாமும் ஏன் கை கொடுக்க கூடாது என்று தான்.. பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கும் நாம் முதல் இடத்திற்கு வருவதற்கு, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாரத தேசத்தை முதன்மை நாடாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் என் இயக்கத்தை பாஜகவோடு இணைத்திருக்கிறேன்” என்றார்.
அதிமுக, தேமுதிக ஆதரிக்க வேண்டும் – சீமான்
நாம் தமிழர் கட்சித் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என எல்லோரும் வந்து கோடிக்கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள். இதுதான் இங்கு கலாச்சாரம். இது ஒரு கேவலம். அதிமுக, தேமுதிக-வில் இருக்கும் உறவுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பொது எதிரி திமுகவை விரட்ட உதவுங்கள்” என்றார்.
13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடியவுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளை போலீசார் துணையுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.