தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சியை தொடங்கியிருந்தாலும், அவர் சினிமாவை விட்டுப்போனது திரையுலகில் இருக்கும் பலருக்கும் கவலையை கொடுத்திருக்கிறது. பொதுவாகவே விஜய்யின் நடிப்புக்கும், நடனத்திற்கும் திரையுலகினர் பலரே ரசிகர்களாக இருக்கிறார்கள். விஜய்யும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு எப்போதும் உதவியாக இருந்து வந்திருக்கிறார். அப்படி விஜய் செய்த பல உதவிகள் வெளியில் தெரியாமல் இருக்கிறது. அதில் குறிப்பாக நடிகர் நாசர் வாழ்க்கையில் விஜய் செய்த உணர்வுப்பூர்வமான உதவியை நாசர் முதல் முறையாக வெளில் பேசியிருக்கிறார்.
இதுபற்றி நாசர் பேசுகையில், “என் மகன் ஃபைசல் நடிகர் விஜய்யின் மிகத்தீவிரமான ரசிகர். அது விஜய்க்கும் தெரியும். அவரும் என் மகனை சந்தித்திருக்கிறார். என் மகன் ஒரு கேம் டிசைனர். சைவம் என்கிற கேமை அவன் தான் வடிவமைத்தான். அந்த வீடியோ கேம் ரிலீஸ் செய்த அடுத்த நாள் விபத்தில் சிக்கினான். அப்போது 14 நாட்கள் சுயநினைவின்றி கோமாவில் இருந்தான். அதன்பின்னர் சிங்கப்பூருக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னர் மீண்டான்.
கோமாவில் இருந்து மீண்ட பின்னர் அவன் அம்மா, அப்பானுலாம் சொல்லல… அவன் விஜய்னு தான் சொன்னான். அவனுக்கு விஜய் என ஒரு நண்பரும் இருக்கிறார். சரி அவரை தான் நினைவில் வைத்திருக்கிறார் என நினைத்தோம். உடனே அவனை வரவழைத்து அவன் முன் நிறுத்தினோம். அப்போது அவன் எந்தவித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. என் மனைவி கமிலா ஒரு சைக்காலஜிஸ்ட் என்பதால், அவன் வேறு யாரையோ தேடுகிறான் என்று சொன்னார்.
பின்னர் தளபதி விஜய்யின் புகைப்படத்தை காட்டியதும் அவனது கண்கள் விரிவடைந்தது. உடனே இந்த விஜய்யை தான் அவன் சொல்லி இருக்கிறேன் என உணர்ந்தோம். அவனுக்கு விஜய்யின் நினைவு மட்டும் இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின் அவனை குணப்படுத்த விஜய்யின் படங்களையும், பாடல்களையும் அவனுக்கு அதிகமாக காட்டத் தொடங்கினோம். அப்போது தான் அவனுக்கு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்ப ஆரம்பித்தது.