2024-ம் ஆண்டில் அதிக வரிகட்டிய முதல் 10 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் இந்தியா. இந்த பட்டியலில் தமிழ் நடிகரான விஜய் 2-வது இடத்தில் இருக்கிறார். 2024-ம் ஆண்டில் மட்டும் விஜய் 80 கோடி ரூபாய் வரி கட்டியிருக்கிறார். தென்னிந்தியாவைச் சேந்த ஒரு நடிகர், நாட்டிலேயே அதிக வரி கட்டியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த லிஸ்டில் விஜய்க்கு முன்னால் இருப்பவர் பாலிவுட் பாட்ஷாவான ஷாரூக் கான். இவர் நடித்த ஜவான், பதான், டங்கி ஆகியவை கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்கள். அத்துடன் ரெட் சில்லீஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும், ஐபிஎல்லில் கேகேஆர் என்ற அணியையும் அவர் சொந்தமாக வைத்துள்ளார். இதனால் கடந்த ஆண்டில் அதிக அளவு பணம் சம்பாதித்த ஷாரூக் கான் 92 கோடி ரூபாயை வரியாக மட்டும் செலுத்தியுள்ளார்.
இந்த பட்டியலில் சல்மான் கான் 75 கோடி வரி செலுத்தி மூன்றாம் இடத்திலும், மூத்த நடிகரான அமிதாப் பச்சன் 71 கோடி வரி செலுத்தி நான்காம் இடத்திலும் இருக்கின்றனர். இந்த சினிமா நட்சத்திரங்களுக்கு மத்தியில் 5-வது இடத்தை கிரிக்கெட் வீரரான விராட் கோலி பிடித்துள்ளார். இவர் ரூ.66 கோடி ரூபாயை வரியாக செலுத்தி இருக்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக ரூ. 42 கோடி வரி செலுத்திய அஜய் தேவ்கன் 6வது இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ரூ.38 கோடி செலுத்தி ஏழாவது இடத்திலும் இருக்கிறார்கள். 8 முதல் 10வது இடம் வரை ரன்பீர் கபூர் (ரூ.36 கோடி), ஹிருத்திக் ரோஷன், சச்சின் டெண்டுல்கர் (தலா ரூ. 28 கோடி ரூபாய்) ஆகியோர் உள்ளனர்.