கவிஞர் வைரமுத்து தொடர்பாக சில விவாதங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. வைரமுத்து தன்னை தவறான நோக்கத்துக்காக வீட்டுக்கு அழைத்ததாக பாடகி சுசித்ரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
“எனக்காக ஒரு பரிசு வைத்திருப்பதாக கூறி வைரமுத்து என்னை வீட்டுக்கு அழைத்தார். நான் என் பாட்டியுடன் அவரது வீட்டுக்கு போனேன். நான் பாட்டியுடன் வருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது பரிசை பற்றி கேட்டேன். அதற்கு அவர் 2 ஷாம்பூ பாட்டில்களை அளித்தார்” என்று கூறியிருந்தார். இது பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதேநேரத்தில் ஒரு பாடல் பதிவின்போது பாடகிக்கு வரிகளை சொல்லிக் கொடுக்கும் வைரமுத்து, “யுவர் ஸ்மைல் ஈஸ் வெரி நைஸ் என்று பாடகியிடம் சொன்னதும் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்த சூழலில் வைரமுத்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கவிதை வருமாறு…
வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்
பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்
தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்
இந்த நோய்க்கு
‘Messianic Delusional Disorder’
என்று பெயர்
அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்
உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை
அணுக வேண்டும்