“வர்த்தகப் போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியிலான `சண்டை செய்ய’ தயார் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனா, தங்கள் மீதான வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கும் வரி விதிப்பு அறிவித்துள்ளது. அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் சோயாபீன்ஸ், சோளம், பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், கடல்வாழ் பொருள்கள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி முதலான பொருள்களுக்கு 10 சதவிகித கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம், பருத்தி, கோழி, கோதுமைக்கு 15 சதவிகித வரி விதிக்கப்படுவதாக சீன நிதியமைச்கம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு மார்ச் 10 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக சீனா அறிவித்துள்ளது. இதனோடு சேர்த்து, கூடுதல் இணைப்பாக அமெரிக்காவின் 25 ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களுக்கு சீனா கட்டுப்பாடு விதித்ததுடன், பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் ஈடுபட்டுள்ள 10 அமெரிக்க நிறுவனங்களை நம்பிக்கையற்ற நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கவும் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமைமுதல் (மார்ச் 4) அமலுக்கு வந்தது.
குறிப்பாக, சீன பொருள்களுக்கு அறிவித்திருந்த 10 சதவிகித வரியுடன், கூடுதலாக 10 சதவிகித வரியையும் டிரம்ப் அறிவித்தது, சீனாவிடம் எதிர்ப்பைக் கிளப்பியது. சீனாவில் தயாரிக்கப்படும் போதை மருந்துகள் கனடா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதால் சீனாவுக்கு கூடுதல் வரி என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு சீனா வரி விதிக்கும் பட்சத்தில், சீனாவுக்கு செல்லும் அமெரிக்காவின் பொருள்களின் அளவு சரிவைச் சந்திப்பது மட்டுமின்றி, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பெரும் இழப்பும் நேரிடலாம்.